×

வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து வாசுதேவநல்லூரில் மறியலில் ஈடுபட்ட 7 பேர் கைது

சிவகிரி, அக்.10:  வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து, வாசுதேவநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மதிமுகவினர் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் இதழில் தமிழக கவர்னரை இழிவுபடுத்தும் விதமாக செய்தி வெளியிட்டதாக, ஆளுனர் மாளிகை அதிகாரிகள் அளித்துள்ள புகாரின் பேரில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திக்கச் சென்றார். ஆனால் போலீசார் அவரை சந்திக்க அனுமதி மறுத்ததால், காவல்நிலையம் முன் வைகோ  தர்ணாவில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து வாசுதேவநல்லூர் பஸ்நிலையம் அருகில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மதிமுக ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். தமிழக அரசின் ஜனநாயக விரோத அராஜகப் போக்கையும், காவல்துறையினரின் அத்துமீறலையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதனையடுத்து ஒன்றியச்செயலாளர் கிருஷ்ணகுமார், வாசு நகரச்செயலாளர் கணேசன், மாவட்ட மாணவரணிச் செயலாளர் மாரிச்சாமி, ஒன்றிய பொருளாளர் மாரிச்சாமி, ஒன்றிய விவசாய அணிச்செயலாளர் பூசைத்துரை, 9வது வார்டு கிளைச்செயலாளர் முருகையா, விஸ்வநாதப்பேரி கிளைச்செயலாளர் பழனிச்சாமி ஆகிய 7 பேரை வாசுதேவநல்லூர் போலிசார் கைது செய்தனர்.

Tags : Vasudevanallur ,arrest ,Vico ,
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...