×

லேசான மழைக்கே குண்டும், குழியுமான பாவாலி ரோடு வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர், அக். 9: விருதுநகரில் லேசான மழைக்கே, பாவாலி ரோடு குண்டும், குழியுமாக மாறியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். விருதுநகர் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள பாவாலி ரோட்டில் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளி, மின்வாரிய அலுவலகம், மாவட்ட மைய நூலகம் உள்ளது. இந்த சாலை வழியாக தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், அரசு பஸ்கள், டூவீலர்கள் சென்று வருகின்றன. மேலும், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், காரியாபட்டியில் இருந்து வரும் பஸ்கள் பாவாலி ரோடு வழியாக சென்று வருகின்றன. நகரின் முக்கியச் சாலையான பாவாலி ரோட்டை ஒட்டி பர்மா காலனி, அகமது நகர், பாரதி நகர் 9 தெருக்கள் மற்றும் தர்காஸ் தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் 5 ஆயிரம் மக்கள் குடியிருந்து வருகின்றனர். நகராட்சி பள்ளியில் 500க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்த நூற்றுக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழையால், ரோட்டில் இருந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி, வாகனங்கள் சென்றதில் பெரிய பள்ளங்களாக மாறியுள்ளன.

பள்ளங்களில் தேங்கியிருக்கும் மழைநீரில் வாகனங்கள் செல்லும் போது பாதசாரிகள் மீதும், டூவீலரில் செல்வோர் மீதும், சேறும், மழைநீரும் தெறிப்பதால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக பள்ளமாக காட்சி தரும் பாவாலி ரோட்டில் தரமான பேவர்பிளாக் சாலை அமைக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.


Tags : road bikers ,
× RELATED போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு