×

மூன்றாம் நாளாக போராட்டம் குமுளி மலைச்சாலையில் டூவீலரில் செல்ல அனுமதி கோரி மறியல் அரசு, தனியார் பஸ்கள் சிறைபிடிப்பு 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கூடலூர். அக்.9:  கூடலூர் அருகே லோயர்கேம்ப் - குமுளி மலைப்பாதையில் மழைகாரணமாக மாதாகோயில் அருகே மற்றும் இரைச்சல் பாலம் மேல்வளைவு பகுதிகளில் கடந்த மாதம் மண் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பலத்த மழையினால் மீண்டும் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த 23ம் தேதி முதல் லோயர்கேம்ப்பில் இருந்து குமுளி வரை மலைப்பாதையில் அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் சாலையின் குறுக்கே சீரமைப்பு பணிக்காக ஜல்லிக்கற்கள் குவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கேரளா மாநிலத்துக்கு கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், பால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சிலர் லோயரிலிருந்து குமுளிக்கு 6 கி.மீ தூரம் நடந்து கூலி வேலைக்கு சென்று திரும்புகின்றனர். பால் வியாபாரிகளும் கம்பம் மெட்டு வழியாக நீண்ட தூரம் சென்று பால் விற்பனை செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் குமுளி மலைப்பாதை வழியாக டூவீலர் செல்ல போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல் கட்டமாக கடந்த வாரம் பால்வியாபாரிகள் பாலை ரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுப்ட்டனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 6 மணி அளவில் லோயர்கேம்ப் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சாலையின் குறுக்கே டூவீலர்களை நிறுத்தி கூலித் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லோயர்கேம்ப் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தியிருந்து 12 நெடுந்தூர பஸ்கள் மற்றும் 2 தனியார் பள்ளி பஸ்கள் செல்லவிடாமல் அவர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கூடலூர் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், உயரதிகாரிகள் வந்தால் தான் பேச்சுவார்த்தையில் உடன்படுவோம். இல்லையெனில் சாலை மறியல் போரட்டம் கைவிட மாட்டோம் என போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்தனர். அப்போது ஒருவர் காவல்துறையினரைதரக்குறைவாக பேசினார். இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளு - முள்ளு ஏற்பட்டது. உடனயாக உத்தமபாளையம் டிஎஸ்பி சீமைச்சாமி, தாசில்தார் உதயராணி ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

டிஎஸ்பி சீமைச்சாமி கூறுகையில், `` பொதுமக்களின் நன்மைக்காக மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறும் போது ஏதேனும் விபத்து ஏற்படாமல் டூவீலர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று மாலை லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைதுறை ஆணையர் (கட்டுமானப் பணி தலைமை பொறியாளர்) மற்றும் பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் கூடி கலந்து பேசி முடிவு எடுத்துக்கொள்ளலாம்’’ என்றார். இதனால் மறியல் கைவிடப்பட்டது.

Tags : hill ,Kumuli ,Government ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!