×

புரதானத்தை பிரதிபலிக்கும் கொலு பொம்மைகள்

திண்டுக்கல், அக்.9: நவராத்திரியை முன்னிட்டு திண்டுக்கல்லில் புரதான நினைவுகளை நினைவூட்டும் ஏராளமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுசரிக்கப்படும் நோன்பு சாரதா நவராத்திரி நோன்பாகும். இதன்படி நாளை முதல் நவராத்திரி விழா துவங்க உள்ளது. முதல் மூன்று நாள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாள் சரஸ்வதிக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுவது வழக்கம். இந்நாளில் வீடுகளில் 5,7,9 என்ற அளவுகளில் படி போன்ற அமைப்பை ஏற்படுத்தி கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவர். தினமும் பூஜை, பஜனை, சொற்பொழிவு உள்ளிட்டவை நிகழ்த்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்படும்.

இந்த வழிபாட்டிற்காக கொலு பொம்மைகள் தற்போது திண்டுக்கல்லில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் காந்திகிராம் ஷோரூமில் இம்முறை விதவிதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 10 தலைகளுடன் கூடிய விஸ்வரூபம், தசவாதார சிலைகள், ஜோதிர்லிங்கம், அஷ்டலட்சுமி, குபேரலட்சுமி, பழநி மலை, கைலாயமலை, வளைகாப்பு, திருமண நிகழ்ச்சி பொம்மைகள், சிவன் மாங்கனி வழங்கும் நிகழ்ச்சி என்று ஏராளமான புரதான நிகழ்வுகளை நினைவுபடுத்தும் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.60 முதல் ரூ.4 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதேபோல் திண்டுக்கல்லின் பல்வேறு இடங்களிலும் கொலு பொம்மை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags : Kole ,
× RELATED ஒட்டன்சத்திரம் பள்ளியில் காலை உணவு திட்டம் ஆய்வு