×

ஓபிஎஸ் அனுப்பிய தூதை நிராகரித்தேன் வேலாயுதம்பாளையத்தில் டிடிவி தினகரன் பேச்சு

கரூர், அக்.9: ஓபிஎஸ் அனுப்பிய தூதை நிராகரித்து விட்டேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கரூர்  வேலாயுதம்பாளையத்தில் அரவக்குறிச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகளை  நிறைவேற்றாத மாநில அரசைக்கண்டித்து நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்  சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. செந்தில்பாலாஜி தலைமை வகித்தார்.  உண்ணாவிரதத்தை முடித்து வைத்து துணை பொதுசெயலாளர் எம்எல்ஏ டிடிவி தினகரன்  பேசியது:

 ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. சிபிஐ விசாரணை  வேண்டும். விசாரணை ஆணையம் வேண்டும் என்ற ஓபிஎஸ்,  தவறுசெய்துவிட்டேன் அதர்ம  யுத்தம் நடத்தி விட்டேன் என கூறி. என்னை பார்க்க வேண்டும் என்றார். நான்  நிர்வாகிகளுடன் பேசிவிட்டு சந்தித்தேன்.  நண்பரான ஒருவர் வீட்டில்  சந்தித்ததை நான் ஒன்னரை ஆண்டுகளாக மறந்தே விட்டேன். ஆனால் கடந்த வாரம்  மீண்டும் ஓபிஎஸ், சாரை பார்க்க வேண்டும். எடப்பாடியை ஆட்சியில் இருந்து  இறக்கிவிட்டு என்னை முக்கியமான பதவியில் அமர்த்த வேண்டும் என சொல்லி தூது  அனுப்பியபோது, நாங்கள் பார்த்துக்கொள்றோம். இந்த ஆட்சியே ஓரிரு மாதங்கள்  இருக்குமா எனதெரியவில்லை என கூறிவிட்டேன்.

  18எம்எல்ஏக்கள் தகுதி  நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்ததும் இந்த ஆட்சி உறுதியாக  முடிவுக்குவந்து மீண்டும் ஜெயலலிதா ஆட்சி உருவாக்கப்படும். அதன்பிறகு   செந்தில்  பாலாஜி என்ன பொறுப்பில் இருப்பார் என்பது உங்களுக்கே தெரியும்.  அவர்  2011-16ல் அவர் அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த ரூ.500 கோடி  மதிப்பிலான   திட்டங்களை எல்லாம் அவரே நிறைவேற்றித் தருவார்.இந்த  ஆட்சி மக்களுக்ககாக அல்ல. சம்பந்திகள், மாமன், மச்சான்களுக்காகவும்  நடத்துகின்றனர். உண்மையான ஜெயலலிதா ஆட்சியை நாங்கள் உருவாக்குவோம். இவ்வாறு  டிடிவி தினகரன் பேசினார்.
செந்தில் பாலாஜி பேசியதாவது:தொகுதி  மக்களின் கோரிக்கைகளை முற்றிலும் புறக்கணித்து விட்டனர். ஜெயலலிதா  அறிவித்ததை செயல்படுத்தாமல் முட்டுக்கட்டைபோடுகிறார்கள். துரோகம் செய்த,   ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான தம்பிதுரையை தேர்தலில் ஓடஓட விரட்டி டெபாசிட்  இழக்க செய்வோம். மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால் பல திட்டங்களை  நிறைவேற்றலாம் என்கிறார். அப்படியானால்  தமிழகத்திற்கு தேவையான நிதியை  தரவேண்டும் என முதல்வர் கேட்டிருக்கிறார். அந்த நிதியை மத்திய அரசு  தரவில்லை என்றால்  துணைசபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வேன் என அவரால்  கூறமுடியுமா. தேர்தலில் அவர் டெபாசிட் வாங்கிவிட்டால் நான் அரசியலைவிட்டு  விலக தயார். எந்த தேர்தலை நடத்தினாலும் வெற்றிபெற முடியாது என பயந்துபோய்  தான் உள்ளாட்சித்தேர்தல், இடைத்தேர்தல் என எதையும் நடத்தாமல்  இருக்கின்றனர். இவ்வாறு செந்தில் பாலாஜி பேசினார். அதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்   பழனியப்பன் மற்றும் பலர் பேசினர்.முன்னதாக விவேகானந்தன்   வரவேற்று பேசினார். நிர்வாகிகள் பிஎச்.சாகுல்அமீது, எஸ்.பி.லோகநாதன், வனிதா   பெரியண்ணன், ஆரியூர் சுப்பிரமணி, சி.நெடுஞ்செழியன், மரகதம் சுப்பிரமணி,   வடிவேல், விஜயகுமார், முத்து, வேலுச்சாமி, மீன்குஞ்சுராமசாமி, மூர்த்தி,   மணிகண்டன், செந்தில்குமார், சுல்தான், மாவட்ட துணை செயலாளர் தாரணி சரவணன்,   இணை செயலாளர் மாலதிநல்லுசாமி உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தங்கவேல் நன்றி கூறினார்.

Tags : Velayuthamalayam ,
× RELATED வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை