×

புதுக்கோட்டை தொகுதியில் வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் கணேசிடம் எம்எல்ஏ பெரியண்ணன் அரசு கோரிக்கை மனு

புதுக்கோட்டை, அக். 9:  புதுக்கோட்டை தொகுதியில் வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் கணேசிடம் எம்எல்ஏ பெரியண்ணன் அரசு கோரிக்கை மனு கொடுத்தார்.புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை வகித்து மனுக்களை பெற்று அதன்  பேரில் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான  பெரியண்ணன் அரசு கலெக்டர் கணேசை சந்தித்து  தொகுதியில் செய்ய ேவண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கை வைத்தார். கறம்பக்குடி  ஒன்றியம் கரு தெற்கு  தெரு, பல்லவராயன்பத்தை பகுதிகளில் சாலை அமைக்க  வேண்டும். இதேபோல் புதுக்கோட்டை ஒன்றியம் வாகவாசல் பகுதியில் சாலை அமைக்க  வேண்டும். மேலும் புதுக்கோட்டை ஒன்றியம் தொண்டைமான் ஊரணி பகுதியில் சாலை  அமைத்தல், வடவாளம், பெருங்களூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலை  அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து கோரிக்கை வைத்தார்.  கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் விடுதலைகுமரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய நான்கு வழிச்சாலை பணிக்காக புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியில் இடத்தின் உரிமையாளர்களிடம் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இரவில் அளந்து கல் ஊன்றியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரு வழிச்சாலையாக உள்ள கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள டோல் பிளாசாவில் தினசரி நஷ்டம் என கூறப்படும் நிலையில் நான்கு வழிச்சாலை அமைப்பது எந்தவிதத்தில் சரியாக இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு காவிரி வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தும் அதனை கொண்டு வராமல் மக்கள் விரும்பாத நான்கு வழிச்சாலை திட்டம் கொண்டு வருவது ஏற்கத்தக்கதல்ல. இதனால் உரிய நடவடிக்கை எடுத்து நிலம் கையகப்படுத்துதலை உடனே நிறுத்தி திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வ.உ.சி சிலை வைக்க அனுமதி கேட்டு மனு: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்த பார்த்திபன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் நூலகம் அருகே உள்ள இடத்தில் சுதந்திர போராட்ட தியாகி வஉசிதம்பரம் பிள்ளையின் வெண்கல சிலை வைக்க அகில இந்திய வஉசி பேரவையின் கிளை கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சிலை வைக்க மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பசுமை மீட்பு குழுவினர் மனு: அரிமளம் பசுமை மீட்பு குழு சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அரிமளம் பகுதியில் உள்ள ஏரி குளங்களுக்கு வரும் வரத்து வாரிகளை தூர்வாரும் பணி முடிந்து தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் ஏரி, குளங்களுக்கு வரவில்லை. இது எதனால் என்று பார்த்தபோது அந்த பகுதியில் வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட ஆர்எஸ்பதி காடுகளுக்கு ஆங்காங்கே வரத்து வாரிகளை மறித்து அணை கட்டி வைத்துள்ளனர். இதனால் தண்ணீர் வராமல் இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வரத்து வாரிகளை மறித்து அணை கட்டியுள்ளதை சரிசெய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திமுக செயலாளர் மனு: திமுக நகர செயலாளார் நைனாமுகமது அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை நகராட்சி 42வது வார்டு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினசரி வழங்க வேண்டிய குடிநீர் முறையாக வழங்கப்படுவதிலை. கழிவுநீர் கால்வாய் வசதியை முறையாக செய்து தர வேண்டும்  மேலும் சாலை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை. இதனால் இனியாவது முறையாக நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். மேலும் அந்த பகுதியில் பழுதடைந்துள்ள மின்கம்கம்பத்தை மாற்றி தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : MLA Piyanannan Government ,constituency ,Pudukottai ,Collector Ganesh ,
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...