×

கொள்ளிடம் அழிஞ்சியாறு கதவணையிலிருந்து வீணாக வெளியேறும் தண்ணீர் தேக்கி வைக்க கோரிக்கை

கொள்ளிடம்,அக். 9: கொள்ளிடம் அழிஞ்சியாறு கதவணையிலிருந்து வீணாக வெளியேறும் நீரை தேக்கி வைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சோதியக்குடி, சரஸ்வதிவிளாகம், கொன்னக்காட்டுபடுகை, மடப்புரம், குத்தவக்கரை, சாமியம், சிதம்பரநாதபுரம், எலத்தூர், சென்னியநல்லூர் உள்ளிட்ட 30 கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு வடிகால் வாயிலாகவும், கரையையொட்டியுள்ள நிலங்களுக்கு பாசன மற்றும் வடிகால் வசதி தரும் மிகப்பெரிய வாய்க்காலாக அழிஞ்சியாறு உள்ளது.


வடரெங்கம் கிராமத்தில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் குத்தவக்கரை என்ற இடத்தில் 25 கிலோமீட்டர் தூரத்தை கடந்து கலக்கிறது. மழைக்காலத்திலும் வெள்ளபெருக்கு ஏற்படும் நிலையிலும் அனைத்து நீரையும் குத்தவக்கரை என்ற இடத்தில் ஆற்றின் வலக்கரையில் ஆணைக்காரன்சத்திரம் வடிகால் மதகு கதவணை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.
இது கொள்ளிடம் பகுதியில் உள்ள தெற்குராஜன் பாசன வாய்க்காலில் தண்ணீர் அதிக வரத்து ஏற்பட்டாலும் அதிலிருந்து ஊமை மதகு கதவணையிலிருந்து அழிஞ்சியாற்றில் விடப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் கலக்க விடப்படுகிறது. இத்தகைய அழிஞ்சியாற்றில்  தற்பொழுது அவ்வப்பொழுது பெய்து வரும் மழையால் குறைந்த அளவிலான தண்ணீர் தேங்கும் போதே கதவணை எப்போதும் திறக்கப்பட்டே  கிடப்பதால் அனைத்து தண்ணீரும் வீணாக சென்று  கொள்ளிடம் ஆற்றில் கலந்து கடலுக்கு சென்று விடுகிறது. எனவே வீணாக வெளியேறும் நீரை ஆரம்ப நிலையிலேயே மழை நீரை முடிந்த அளவிற்கு தேக்கி வைக்க கதவணையை மூடவும் அதிக மழை பெய்தால் தேங்கும் உபரி நீரை கதவணை திறந்து வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பயணியிடம் நகை பறித்த வாலிபர் சிறையிலடைப்பு