×

பெருங்களத்தூர் பாப்பன் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ₹50 கோடி அரசு நிலம் மீட்பு „ காஞ்சி கலெக்டர் அதிரடி „ வருவாய்த்துறை மீது சரமாரி புகார்

தாம்பரம், அக். 9: பெருங்களத்தூர் பாப்பான் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டு, ₹50 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது. தாம்பரம் அருகே பெருங்களத்தூர் பேரூராட்சியில், குட்வில் நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் பாப்பன் கால்வாய் செல்கிறது. இந்த பாப்பன் கால்வாயில் இருந்து அடையாறு ஆற்றிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் பகுதியில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவுள்ள நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளது. கடந்த ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது பாப்பன் கால்வாயை ஆக்கிரமித்து பலர் குடியிருப்புகள் கட்டி இருந்ததால், நீரோட்டம் செல்ல வழியில்லாமல் பெருங்களத்தூர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் அதிகாரிகள் அடையாறு ஆற்றில் உள்ள அக்கிரமிப்புகளும், பாப்பன் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளும் ஆய்வு செய்து அதிரடியாக அகற்றினர். இருப்பினும், சில மாதங்களில் அந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் முளைக்க தொடங்கின. அடையாறு ஆற்றங்கரையில் ₹50 கோடி மதிப்புள்ள சுமார் 6 ஏக்கர் பரப்பளவுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் சமூகவிரோதிகள் சிலர் பிளாட் போட்டு விற்கும் பணியில் ரகசியமாக ஈடுபட்டு வந்தனர். இதில், ஒரு சென்ட் நிலம் ₹3 லட்சம் என விற்பனை செய்யப்பட்டது. பின்னர், இந்த இடத்தில் 8 வீடுகள் கட்டப்பட்டது. இதற்கு மின்வாரியம் சார்பில் மின் இணைப்பும் வழங்கப்பட்டது. வருவாய்த்துறையினர் உடந்தை உடன் ஆக்கிரமிப்பு வீடுகள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்பகுதி பகுதியை சேர்ந்த மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா திடீரென மேற்கண்ட ஆக்கிரமிப்பு பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, பாப்பன் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, வருவாய்துறையினரை அழைத்து, ‘‘எவ்வளவு பெரிய வெள்ளப்பாதிப்புகள் ஏற்படும் இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் புதிதாக வந்திருக்கிறது.  அவ்வளவு ஆக்கிரமிப்புகள் அகற்றியும், இந்த வீடுகள் உங்களுக்கு தெரியாமல் எப்படி கட்டப்பட்டது. ஏன் இந்த வீடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்’’ என்று உத்தரவிட்டு சென்றார்.
அதன்படி, நேற்று காலை பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் மேற்கண்ட பகுதியில் இருந்த 8 ஆக்கிரமிப்பு வீடுகளை அதிரடியாக இடித்து அகற்றி, ₹50 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை மீட்டனர். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வந்தாலும், தாம்பரத்தில் உள்ள வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போவதால், ஆக்கிரமிப்புகள் தொடர்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Removal ,government ,land reclamation ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...