×

சின்னதாதம்பாளையத்தில் சந்துக்கடை மதுவிற்பனையால் பொதுமக்கள் கடும் அவதி

கரூர், செப்.25: சின்னதாதம்பாளையத்தில் சந்துக்கடைகளில் மதுவிற்பனை ஜரூராக நடைபெறுவதால் குடிமகன்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டே போகிறது. எனவே சந்துக்கடைகளை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அன்பழகன் தலைமையில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி தாலுகா பவித்திரம் கிராமம் சின்னதாதம்பாளையத்தில் குடியிருக்கும் பொதுமக்கள்அளித்த மனு: 150 குடும்பங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறோம். சந்துக்கடை வைத்து திருட்டுத்தனமாக மது விற்பனை செய்கின்றனர். டாஸ்மாக் கடையினிர் உடந்தையோடு அதிகவிலைக்கு விற்பனை செய்கின்றனர். பாட்டில்களை உடைப்பது, குடிபோதையில் சண்டைபோடுவது, என பொதுமக்களுக்கு இடையூறு, பொதுஅமைதிக்குப் பங்கம் ஏற்படுகிறது. தட்டிக்கேட்பவர்களை மிரட்டி வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் அளித்த மனு:
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வழிகாட்டலில் தமிழுக்கும் அமுதென்று பேர் திட்டத்தின்கீழ் தமிழ்க்கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். அனைவரும் தங்களது பெயரையும் முன்னெழுத்தையும் தமிழிலேயே இடவேண்டும். அரசு பணியாளர்கள் தமிழில் கையொப்பம் இடவேண்டும் என்ற அரசாணையை மதிக்காத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. மாவட்ட அரசு அலுவலகங்களில் பதியப்படும் பதிவேடுகள், கடிதங்கள், ஆணைகள், காலமுறை அறிக்கைகள், நாட்குறிப்புகள், பெயர் பலகைகள், முத்திரைகள் அனைத்தும் தமிழிலேயே அமைதல் வேண்டும். அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இட வேண்டும் என்ற அரசாணையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் அளித்த மனு: கரூர் பஸ்நிலையத்திற்கு அருகே மிக அதிக டாஸ்மாக் அரசு மதுபானக்கடைகள் உள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்கின்றனர். பஸ்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பாதுகாப்புடன் வந்து செல்லும் வகையில் அரசு மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடைகளில் 50 சதவீதம் கடைகள் 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டு இருப்பதை மாவட்ட நிர்வாகம் உடனே தடுக்க வேண்டும். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பாலராஜபுரம் முதல் தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட குளத்துப்பாளையம் வரை உள்ள சலைகள் 15 ஆண்டாக பராமரிப்பு செய்யப்படாததால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலைமை உள்ளது. உடனே சாலையை சீரமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு