செல்போன் அடிக்‌ஷன்… அலெர்ட் ப்ளீஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

 

நவீன யுகத்தில் குழந்தைகள் முதல் டீன்ஏஜ் பிள்ளைகள் வரை அனைவருமே செல்போனுக்கு அடிமையாகிவிட்டனர். இதன் பின்னணியை அமெரிக்காவின் `காமென் சென்ஸ் மீடியா’ என்ற அமைப்பு சமீபத்தில் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தது. அதன் முடிவில், `குழந்தைகளைவிட அதிகமாக செல்போனுக்கு அடிமையாகியிருப்பது அவர்களின் பெற்றோர்கள்தாம்’ என்பது தெரியவந்திருக்கிறது.

பிரச்னை என்னவென்றால், `நாம் செல்போனுக்கு அடிமையாகி இருக்கிறோம்’ என்கிற புரிந்துணர்வு 45 சதவிகித பெற்றோர்களுக்கு இருக்கிறது. ஆனாலும் அந்தப் பழக்கத்திலிருந்து அவர்களால் வெளியேவர முடியவில்லை. ஆய்வாளர்கள் தரப்பில், `செல்போன் உபயோகத்தைக் கட்டுப்படுத்த குழந்தைகளைவிடப் பெற்றோர்களே கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்கள். பெற்றோர்கள் அதிக நேரம் செல்போன் உபயோகிப்பது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.

குழந்தைகளை மூன்று வயதுக்குட்பட்டவர்கள், பத்து வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் பதின் பருவத்தினர் எனப் பிரிக்கலாம். இவர்கள் அனைவருக்குமே, அவர்களது வயதுக்கேற்ப பெற்றோர்களிடமிருந்து சில எதிர்பார்ப்புகளும் தேவைகளும் இருக்கும். உதாரணமாக, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைக்கு, பசியும் தூக்கமுமே பிரதானம். அவை தேவைப்படும்போதெல்லாம், குழந்தையின் மனம் பெற்றோரைத் தேடத் தொடங்கும். இந்த இடத்தில்தான் பெற்றோர்கள் தவறு செய்கின்றனர். பல பெற்றோர்கள் குழந்தையின் கைகளில் செல்போனைக் கொடுத்து சமாதானப்படுத்துவார்கள். செல்போனின் இரைச்சலைக் கேட்டு வளரும் குழந்தை, நாளடைவில் மனதளவில் செல்போனோடு ‘கனெக்ட்’ ஆகிவிடும்.

குழந்தையின் நடத்தை தொடர்பான வளர்ச்சியில் செவிகளுக்கும் மூளைக்கும் முக்கியப் பங்கு உண்டு. பெற்றோர் சொல்வதைச் செவிகளால் கேட்டு வளரும் குழந்தை, சிறப்பான நடத்தையுடன் இருக்கும். ஆனால், நிதர்சனத்தில் இன்றைய குழந்தைகளுக்கு அது கிடைப்பதில்லை. கதை கேட்க வேண்டுமென்றால்கூட குழந்தைகள் அம்மாவைத் தேடுவதில்லை. யூடியூபைத்தான் நாடுகின்றனர். ‘கதை சொல்லிகள்’ கிடைக்காத மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைக்குப் பேச்சுத்திறனும், கற்பனைத்திறனும் கேள்விக்குறியாகிவிடுகின்றன. செல்போனின் துணையுடன் வளரும் மழலைகளுக்கு, மற்றவரின் கண்களைப் பார்த்துப் பேசும்திறன் இருப்பதில்லை. சரளமாகப் பேசும் திறனும் இருக்காது. காரணம், இவர்கள் உரையாடலுக்குப் பழக்கப்படவில்லை. பெற்றோர்கள் இவர்களுடன் செலவிட வேண்டிய நேரத்தில் டிஜிட்டல் திரைக்குள் மூழ்கியிருப்பதே காரணம்.

பத்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் தூக்கமின்மையாலும் நடத்தை தொடர்பான பிரச்னைகளாலும் அவதிப்படுவதைக் காண முடிகிறது. சிறு வயதிலேயே கழுத்துவலி, பின்முதுகு வலி, ‘டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்’ (Text Neck Syndrome) எனப்படும் வளைந்த கழுத்துப் பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இத்தனை சிக்கல்களுடன் பதின்பருவத்துக்குள் நுழையும் குழந்தைகளுக்கு, பெற்றோர் மீதான நம்பிக்கை குறைந்துவிடுகிறது. தங்களுக்குள் ஏற்படும் மனரீதியான மற்றும் ஹார்மோன் மாற்றங்களைப் பெற்றோரிடம் சொல்லத் தவறும் பின்னணி இதுதான். இந்தச் சூழலில் பெற்றோர்கள் அதைப் புரிந்துகொண்டு செயல்படும்பட்சத்தில், பிரச்னையின் தீவிரத்தைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

மொபைல் உபயோகத்தை எப்படித் தவிர்க்கலாம்?

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள், வீட்டுக்குச் சென்ற பிறகும் சமூகவலைதளங்களில் அலுவலகத்துடன் தொடர்பிலேயே இருக்கின்றனர். பெரும்பாலானோர், வீட்டில் அலுவலக வேலைகளைப் பார்க்கின்றனர். வீட்டுக்கு வந்த பிறகும்கூட மனதளவில் அலுவலகத்தைவிட்டு வெளியே வருவதில்லை. ஈமெயில், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் எனப் படுக்கைக்குச் செல்லும்வரை அலுவலகக் குழுவுடன் இணைந்தே இருக்கிறார்கள். இவர்கள், `தூங்கப் போவதற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னர் செல்போனை அணைத்துவிட வேண்டும்’ என்று மனதளவில் முடிவு செய்து, அதைச் செயல்படுத்த வேண்டும்.

வேலைக்குச் செல்லாத பெற்றோர்கள் சிலரும்கூட வீடியோக்கள் பார்ப்பதில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். இவர்கள் வீட்டில் நேரத்தைக் கடத்துவதற்கான மற்ற விஷயங்களைக் கண்டறிய வேண்டும். பிடித்த வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது சிறந்த தீர்வாக இருக்கும்.

தொகுப்பு : சரஸ்

மொபைல் அடிக்‌ஷன்… ஒரு டேட்டா!

62 சதவிகித பெற்றோர்கள், இரவு தூங்கும்போது தங்களின் படுக்கைக்கு மிக அருகே, அதாவது கைக்கு எட்டும் தூரத்தில் செல்போனை வைத்துக்கொள்ளவே விரும்புகின்றனர். நான்கில் ஒரு பெற்றோருக்கு செல்போனில் வரும் ‘நோட்டிஃபிகேஷன்’ காரணமாகத் தூக்கம் தடைப்படுகிறது.தூங்கச் செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர்வரை செல்போன் பயன்படுத்துவதைப் பெற்றோர்கள் நிறுத்துவதில்லை. செல்போனில் அதிக நேரம் செலவிடுவதாகக் கூறும் பெற்றோர்களின் எண்ணிக்கை, 2016-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பெரும்பாலான குழந்தைகள், தங்கள் பெற்றோர்கள் செல்போன் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கைவிட இந்த எண்ணிக்கை தற்போது 11 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.61 சதவிகித பெற்றோர்கள், ‘தங்களைவிட, தங்களுடைய குழந்தைதான் செல்போனுக்கு அடிமையாக இருக்கிறது’ எனத் தாங்களாகவே முடிவு செய்துகொள்கிறார்கள்.‘செல்போன் உறவுகளுக்குள் சிக்கலை ஏற்படுத்தும்’ எனப் பெரும்பாலான பெற்றோர்கள் நினைப்பதில்லை.பெற்றோர்கள் செல்போனுக்கு அடிமையாக இருப்பதாக உணரும் குழந்தைகள், ‘தங்களுக்கும் அவர்களுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக’ உணர்கிறார்கள்.

Related Stories: