
நன்றி குங்குமம் டாக்டர்
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துவரும் இவர், அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, கெளதம் கார்த்திக்குடன் தேவராட்டம், ஜீவாவுடன் ‘களத்தில் சந்திப்போம்’, விக்ரம் பிரபுவுடன் சத்திரியன், விஷ்ணு விஷாலுடன் எப்.ஐ.ஆர் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சிம்புவுடன் பத்து தல’ மற்றும் அக்டோபர் 31 லேடீஸ் நைட் போன்ற படங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் கெளதம் கார்த்திக்குடனான காதலை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேசு பொருளாகியுள்ள மஞ்சிமா, தனது பிட்னஸ் ரகசியங்களை பகிர்ந்துகொள்கிறார்.
“நான் சிறுவயது முதலே திரைத்துறையில் இருப்பதால், அப்போதிலிருந்தே தினசரி யோகா, உடற்பயிற்சி எல்லாம் ரெகுலராக செய்துவந்தேன். இந்நிலையில், 2019-ம் வருஷம் எனக்கு கால்ல ஒரு சர்ஜரி நடந்தது. அதன்பிறகு, கடுமையான முதுகுவலி, அதுக்கான ட்ரீட்மென்ட்டுனு இருந்ததால கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன். ஒரு கட்டத்துல என் வெயிட்டை வெச்சு என்னை பாடி ஷேமிங் பண்ண ஆரம்பிச்சாங்க.
நான் நடிச்ச படத்தோட புரமோஷனுக்குப் போக வேண்டியிருந்தது. அங்கே என்னைப் பார்த்த எல்லாரும் என் வெயிட்டை பத்தியே கேள்வி கேட்க ஆரம்பிச்சாங்க. எல்லாருக்கும் பதில் சொல்றதும் விளக்கம் கொடுக்கிறதுமே வேலையா இருந்தது. அது எனக்கு பெரிய ஸ்ட்ரெஸ்ஸை கொடுத்தது. ஆனால், இவர்களுக்கு ஏன் புரிவதில்லை, நடிகைகளும் மனுஷங்கதானே... சாதாரண மனுஷங்க சந்திக்கிற எல்லாவிதமான உடல், மனநல பிரச்னைகளையும் நாங்களும் எதிர்கொள்வோம்தானே.
நடிகைன்னா குண்டா இருக்கக்கூடாதுங்கிற விதியை ஆடியன்ஸ் யாரும் உருவாக்கலை. இன்னும் சொல்லப்போனா நான் சந்திக்கிற மக்கள்ல பலரும் நான் கொஞ்சம் இளைச்சாலே, `ஏன் இளைத்துவிட்டீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். ஆனா இண்டஸ்ட்ரிக்குள்ளதான் பிரச்னையே... அதுவும் டைரக்டரோ, கூட நடிக்கிறவங்களோ கேட்க மாட்டாங்க. மத்தவங்கதான் கேட்பாங்க. ஆனா இதெல்லாம் என்னை பாதிக்காதுனு மனசுல நினைப்பேன்.
அதுக்காக நான் இப்படித்தான் இருப்பேன்னு சொல்லவரலை. கமர்ஷியல் படத்துல நடிக்கும்போது அந்தப் படத்துல அந்தக் கேரக்டருக்கு என்ன தேவையோ நான் அதுக்கேத்த மாதிரி இருக்கணும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஏன்னா அது என் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயமும்கூட. என்னைப் பொறுத்தவரை, ஒல்லியாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை, ஆரோக்கியமாக இருந்தால் போதும்.இப்போது, நான் வெயிட் லாஸ் முயற்சிகளில் தீவிரமா ஃபாலோ பண்ணிட்டிருக்கேன். அதற்காக, மீண்டும் யோகா செய்வது, பிசியோதெரபி, டயட்டீஷியனுடைய அட்வைஸை ஃபாலோ பண்றதுன்னு எல்லாம் செய்ய தொடங்கிவிட்டேன்.
உடற்பயிற்சி:
தினமும் காலை 5.30 மணிக்கு எல்லாம் எழுந்துவிடுவேன். ஒரு மணிநேரம், யோகா செய்வேன். எனக்கு ஜிம் போகிற பழக்கம் இல்லை. அதனால், வீட்டிலேயே சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்வேன் அவ்வளவுதான். இதைத் தவிர, நீச்சல்பயிற்சி தொடர்ந்து செய்கிறேன். அதுவே பிட்டாக வைத்துக் கொள்ள போதும் என்று நினைக்கிறேன்.
என்னுடைய டயட் மாதாமாதம் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு மாதம் சூப் மட்டுமே எடுத்துக்கொள்வேன். அதிலும் போட்டோ சூட் இருந்தால், ஒரு வாரம் கடுமையான டயட் பாலோ செய்வேன். மூன்று வேளையும் முறையான, சத்தான உணவுகளையே எடுத்துக் கொள்வேன். அதிலும் எனது தினசரி உணவில் பழங்கள் நிறையவே இருக்கும். எனக்கு பழங்கள் சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும்.
என் அம்மா தயாரிப்பில் சிக்கன் ரொம்பவும் பிடிக்கும். அம்மா ரொம்ப ஸ்பைஸியா சமைப்பாங்க. சினிமாவுக்கு வந்தபிறகு , ஸ்வீட்ஸ் சாப்பிடுவதை வெகுவாக தவிர்த்துவிட்டேன். அதிலும் ரொம்பவும் பிடித்த கேரமல் கஸ்டர்ட் மற்றும் குலோப் ஜாமூன் ரொம்ப பிடிக்கும். அவற்றையெல்லாம் வெகுவாக குறைத்துவிட்டேன்.
ஸ்கின் கேர்:
நான் எப்போதும் குறைந்த அளவிலேயே மேக்கப் உபயோகப்படுத்துவேன். சிலநேரம் பட புரோமோஷனுக்கு போகும்போதுகூட சிம்பிள் மேக்கபில்தான் இருப்பேன். சூட்டிங்கின்போது மட்டும் அந்த கேரக்டருக்கு ஹெவி மேக்கப் தேவைப்பட்டால், அதை செய்துகொள்வேன் அவ்வளவுதான்.
எனது தினசரி, மேக்கப் என்றால், சன் ஸ்கீரின், மாய்ச்சுரைஸ் இவை இரண்டும் கட்டாயமாக இருக்கும். அடுத்தபடியாக காஜல், லிப் பாம் இருக்கும் அவ்வளவுதான். கடவுள் அனுகிரகத்தாலே எனக்கு இயற்கையாகவே நல்ல ஸ்கின் அமைந்துள்ளது. எனது அம்மாவைப் போலவே. தலைமுடி பராமரிப்பு என்றால், உங்களுக்கே தெரியும் கேரளா பெண்கள் எல்லாருக்குமே பெரும்பாலும், முடி நல்ல வளமாக இருக்கும். அதற்கு காரணம், தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதுதான். நானும் அப்படித்தான்” என்றார்.
தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்