×

திருச்சுழி அருகே ‘பேசாத கிராமத்தில்’ சதிக்கல் கண்டுபிடிப்பு : பண்பாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு

விருதுநகர்:திருச்சுழி அருகே இயற்கை சீற்றங்களால் அழிந்த கிராமத்தில் சதிக்கல்லை கண்டுபிடித்து பண்பாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் உள்ள வடபகுதி கண்மாய்க்கரையில் பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர்கள் முத்துராமன், செல்வம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செங்கற்கள், பானை ஓடுகள், கிராம தெய்வ கோயில்கள் இருந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டன. கள ஆய்வில், அப்பகுதியில் கீழ அம்மனேரி என்ற கிராமம் இருந்ததாகவும், கண்மாய் நிறைந்ததில் தண்ணீர் கிராமத்திற்குள் புகுந்து அழிந்ததாகவும் தெரிவித்தனர். தற்போது கிராமம் இருந்த இடத்தில் குடியிருப்புகள் இல்லை. அங்கு மக்கள் வழிபட்ட முனியசாமி கோயிலும், அருகே சதிக்கல் சிற்பமும் காணப்படுவது தெரிந்தது.ஆய்வு மேற்கொண்ட வரலாற்று பேராசிரியர் செல்லப்பாண்டியன் கூறுகையில், ‘‘பஞ்சம், வறட்சி, புயல் சீற்றங்களால் கிராமங்கள் அழியும்போது, வரலாற்று எச்சங்களை சான்றுகள் வடிவிலோ, நாட்டுப்புற கதைகள் வடிவிலோ சமூகத்தில் பதிவு செய்துவிட்டு அழியும் கிராமங்களை ‘வாய் பேசாத கிராமம்’ என அழைப்பர். இந்த கிராமத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான சிறு, சிறு சான்றுகள் கிடைக்கின்றன. மக்கள் வழிபட்ட முனியசாமி கோயில், சதிக்கல் சிற்பம் ஆகியவை உள்ளன. ஒரே கல்லிலான சிற்பத்தில் ஆண், பெண் உருவங்கள் உள்ளன. ஆணும், பெண்ணும் காலை தொங்க விட்டு சுகாசன நிலையில் உள்ளனர். ஆணின் வலது கையில் நீண்ட வாள், இடது கையில் குத்துவாள், வலதுபுறத்தில் சருகு கொண்டையுடன் காட்சி தருகிறது. பெண் சிற்பத்தின் வலது கையில் அரிவாள் போன்ற ஒரு ஆயுதம் உள்ளது. இருவரும் கிராமத்தை காத்த தலைவன், தலைவியாக இருக்கலாம். சிற்பம் 17ம் நூற்றாண்டு நாயக்கர் காலம் என அறியப்படுகிறது. சிற்பத்தை தற்போதுள்ள கிராமத்தினர் சீலைக்காரி அம்மன் என வணங்குகின்றனர். குடியிருப்புகள் அழிந்து முட்காடுகள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருப்பதால் கிராமத்தினர் வந்து வழிபாடு நடத்துவது சிரமம் என்பதாலும், மழைக்காலங்களில் வந்து வழிபட இயலாத காரணத்தினால் கிராம எல்லையில் ஒரு சிறு கல் நட்டு வழிபட்டு வந்துள்ளனர்’’ என்றார்….

The post திருச்சுழி அருகே ‘பேசாத கிராமத்தில்’ சதிக்கல் கண்டுபிடிப்பு : பண்பாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vrudunagar ,Chirkruskral ,Virutunagar District ,
× RELATED சிக்ஸ்பேக் கணபதியும் ரெடி: விநாயகர்...