×

கண்ணீரோடு கடந்த கொரோனா நாட்கள் புதிய பொம்மைகளை உருவாக்கும் கைவினை தொழிலாளர்கள்: சாலையோரங்களில் துளிர்விடும் நம்பிக்கை

சேலம்: கொரோனா ஊரடங்கு நாட்களை கண்ணீரோடு கடந்த நிலையில், நம்பிக்கையுடன் புதிய பொம்மைகளை உருவாக்கி வருவதாக கைவினை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் குடில் அமைத்து சாமி சிலை, திருஷ்டி பொம்மைகளை செய்து ராஜஸ்தான் தொழிலாளர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூரில் போதிய வருவாய் கிடைக்காததால், நாடு முழுவதும் பரவிக்கிடப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த வகையில் கைத்தொழிலுக்கு பிரசித்தி பெற்ற தமிழகத்தில் தற்போது, பொம்மைகள், சாமி சிலைகள் செய்வதில் வெளி மாநில தொழிலாளர்களே அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் தமிழகத்தில் வீடுகளில் பொம்மைகள் செய்வது குடிசைத் தொழிலாக இருந்தது. அதிலும் மதிநுட்பத்துடன், கைவண்ணத்தை காட்டி நம் தமிழக கைவினைஞர்கள் படைக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், இன்றும் உலகநாடுகளின் கவனம் ஈர்த்துள்ளது.  அதே நேரத்தில் இதர சாமி சிலைகள், திருஷ்டி பொம்மைகள் செய்வதில் தமிழக கைவினைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதில் தங்களின் கைவண்ணத்தை காட்டி கவனத்தை ஈர்ப்பவர்கள் ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள். இவர்கள், நாடு முழுவதும் புறவழிச்சலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரமாக குடில் அமைத்து இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, நெல்லை என பரவலாக ஆங்காங்கே சாலையோரங்களில் குடில்கள் அமைத்து சாமி சிலைகள், பொம்மைகளை செய்து விற்பனை செய்கின்றனர். சேலத்தில் கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலை, சங்ககிரி சாலை, இரும்பாலை சாலை போன்ற பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ராஜஸ்தானை சேர்ந்த தொழிலாளர்கள் குடில் அமைத்து குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.  இவர்கள், முருகன், விநாயகர், சிவன், ராமன், கிருஷ்ணன், சாய்பாபா, ஐயப்பன், அம்மன் உள்ளிட்ட கடவுள்களின் சிலைகள், திருஷ்டி பொம்மைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மைகள் போன்றவற்றை வெள்ளை சிமெண்ட், தேங்காய் நார், சுண்ணாம்பு பவுடர் போன்றவற்றின் மூலம் செய்கின்றனர். சாலையோரங்களில் சாமி சிலைகள், திருஷ்டி பொம்மைகளை அழகுபட அடுக்கி வைத்து வியாபாரத்தில் ஈடுபடும் இவர்கள், தள்ளுவண்டிகளில் கிராமங்களுக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதன்மூலம் கிடைக்கும் வருவாய் தான், இவர்களின் வாழ்வாதாரமாக இருந்தது. ஆனால் கடந்த 2மாதங்களாக நீடித்த ஊரடங்கு, இவர்களின் வருவாய்க்கு உலை வைத்துவிட்டது. ஆனாலும் விரைவில் விடியல் பிறக்கும் என்ற  நம்பிக்கையோடு தினமும் இவர்களின் கைவண்ணத்தில், பொம்மைகள் உருவாகிக் கொண்டிருக்கிறது.  இது குறித்து கொண்டலாம்பட்டி பகுதியில் பொம்மைகள் செய்து வரும் ராஜஸ்தான் கைவினை தொழிலாளர்கள் கூறியதாவது: எங்கள் மாநிலத்தில் வருவாய் ஈட்டித்தரும் வகையில் தொழில்கள் எதுவும் இல்லை. கட்டிட வேலைக்கு சென்றால் 300ம், விவசாய கூலி வேலைக்கு சென்றால் 200ம் கிடைக்கும். அதுவும் எப்போதும் வேலை இருக்காது. இதனால், பொம்மைகள் செய்வதை கற்றுக்கொண்டு பிழைப்பிற்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா, மேற்கு வங்கம் என நாடு முழுவதும்  வசித்து வருகிறோம். இந்த வகையில் சேலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். வாடகை நிலத்தில் குடில் அமைத்து பொம்மைகளை செய்கிறோம். சாமி சிலைகளை 50 முதல் 1000 வரையில் அளவை பொறுத்து விற்கிறோம். திருஷ்டி பொம்மைகள் 100 முதல் 600 வரையில் விற்பனை செய்கிறோம். ஆனால் கொரோனா ஊரடங்கு எங்களை போன்ற தொழிலாளிகளை வெகுவாக பாதித்து விட்டது. உணவுக்கே கஷ்டப்பட்டோம். உருவாக்கிய பொம்மைகள் அனைத்தும் அப்படியே முடங்கி நிற்கிறது. வருவாய்க்கு வேறு எந்த வழியும் இல்லாததால் கண்ணீரோடு தான், பல நாட்கள் கடந்து செல்கிறது. ஆனாலும் ஊரடங்கு ஓய்வு நாட்களில் ரசனையோடு புதிய பொம்மைகளை உருவாக்கி வருகிறோம். இதுதான் எங்கள் கவலைகளை மறக்கச் செய்கிறது. குடும்பத்துடன் தங்கியிருந்து தொழில் செய்வதால், பிள்ளைகளை இங்குள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறோம். விரைவில் இயல்பு நிலை திரும்பும். அப்போது எங்கள் பொம்மைகள் வழக்கம் போல் மக்களின் கவனத்தை ஈர்த்து விற்பனையாகும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு தொழிலாளர்கள் கூறினர்….

The post கண்ணீரோடு கடந்த கொரோனா நாட்கள் புதிய பொம்மைகளை உருவாக்கும் கைவினை தொழிலாளர்கள்: சாலையோரங்களில் துளிர்விடும் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Corona ,Salem ,Handicraft ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...