×

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு


திருச்சி, ஜூலை 5: இலங்கையை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மனைவி உதயலதா (43). இருவரும் கடந்த 2 மாதத்திற்கு முன் இங்குள்ள உறவினர்களை சந்திப்பதற்காக திருச்சி வந்தனர். திருச்சி கே.கே.நகர் தென்றல்நகர் உத்தமர் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். அந்த வீட்டின் பராமரிப்பு பணியை கரூர் மாவட்டம் மயிலம்பட்டி பகுதியை சேர்ந்த சிவசக்தி (25) என்பவர் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அதே பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் (23) என்பவர் உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பரமேஸ்வரன் இலங்கைக்கு புறப்பட்டு சென்றார். கடந்த 1ம் தேதி வீட்டில் உதயலதா தனியாக இருப்பதை அறிந்த சிவசக்தி, நண்பருடன் உள்ளே சென்று உதயலதாவின் வாயை துணியால் அழுத்தி அவர் அணிந்த செயின், மோதிரம் என 4 பவுன் நகைகளை பறித்து கொண்டு தப்பியோடினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவான 2 பேரையும் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
உறையூரில் 2 கடையில் திருட்டு: திருச்சி உறையூர் அருணா தியேட்டர் அருகே உள்ள வணிக வளாகத்தில் சோமரசம்பேட்டை மல்லியம்பத்து மாரியம்மன் தெருவை சேர்ந்த ஸ்டாலின் (46) என்பவர் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். அதுபோல் இவரது கடைக்கு அருகில் புத்தூர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்த செந்தில் (42) என்பவர் எலக்ட்ரிக்கல் அண்டு ரீ வைண்டிங் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இரவு இருவரும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை வந்து பார்த்த போது இருவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் ஸ்டாலின் கடையில் இருந்த ரூ.26 ஆயிரம் பணம், செந்தில் கடையில் இருந்த ரூ.4 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.

இதுகுறித்து இருவரும் தனிதனியாக கொடுத்த புகாரின் பேரில் உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
வயிற்று வலி மாத்திரைதின்ற பள்ளி மாணவி பலி: திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் காந்திஜி தெருவை சேர்ந்தவர் வடிவேல் மகள் மீனாட்சி (14). இவர் காட்டூரில் உள்ள அரசு பெண் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. அதற்கு வழக்கம் போல் சாப்பிடும் மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இதுபோல் கடந்த 28ம் தேதி வயிற்று வலி ஏற்பட்ட போது அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார். இதையடுத்து சிகிச்ைசக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாட்சிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு: தொட்டியம் அருகே திருநாராயணபுரத்தில் ஆண் சடலம் எரிந்து போன நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. தொட்டியம் தாலுகா திருநாராயணபுரத்தில் காவிரி ஆற்று ஓரத்தில் உள்ள முட்புதரில் நேற்று எரிந்துபோன நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்ததை பார்த்த அப்பகுதியில் ஆடுமேய்பவர்கள் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்னர். போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறும்போது, எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காணமுடியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

அவருக்கு 35 வயது இருக்கலாம். உடலில் பச்சை கலர் பனியனும், ஊதா நிற டவுசரும், வேட்டியும் காணப்படுகிறது. அவர் யார்?, எங்கு கொலை செய்யப்பட்டார், கொலைக்கான காரணம் என்ன? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றுக்கரையில் முட்புதரில் எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED கலைஞர் பல்கலைக்கு கையெழுத்திட...