திங்கள் கிழமைக்குத் தயாராவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

ப்ரேக்கிங் டிப்ஸ்!

நாளை திங்கள் கிழமை என்ற எண்ணம் சிலருக்கு முதல் நாள் இரவே சோர்வைத் தருகிறது. இரவில் மிகத் தாமதமாகத் தூங்கி, திங்கள் காலையில் தாமதமாக, சோம்பலாக எழுந்து, அரை மனதோடு  கிளம்பி, தாமதமாகப் பணியிடம் வந்து, வேலைகளைச் சொதப்பி, தானும் டென்ஷனாகி உடன் பணிபுரிபவர்களையும் டென்ஷன் ஆக்கிவிடுகிறார்கள். எப்போதாவது ஒரு திங்கள் கிழமை இப்படித் தோன்றினால் பிரச்னை இல்லை. ஆனால், எப்போதும் திங்கள் கிழமையைப் பார்த்து ஒருவர் அலறினால், பிரச்சனை திங்கள் கிழமையில் இல்லை. அலறுபவரிடம்தான் உள்ளது. இந்தப் பிரச்னையை ‘மண்டே மார்னிங் ப்ளூ’ என்கிறார்கள்.

இது ஓர் உளவியல் பிரச்னை. மனஅழுத்தம், மனச்சோர்வு, தன்னம்பிக்கைக் குறைவு, உடன் வேலை செய்பவர்கள், செய்யும் வேலை, பணியிடச் சூழல் குறித்த எதிர்மறை எண்ணங்கள், வேலைக்குச் செல்வதில் ஆர்வம் இன்மை போன்றவை ‘மண்டே மார்னிங் ப்ளூ’ பிரச்னையின் முக்கியமான அறிகுறிகள். இந்த மண்டே மார்னிங் ப்ளூ என்பது வெல்ல முடியாத சிக்கலா என்றால் இல்லவே இல்லை. சரியாகத் திட்டமிட்டு சில பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த மண்டே மார்னிங் ப்ளூவை எளிதாய் கடக்கலாம்.

உண்மையான பிரச்னையை அறிவோம்

செய்யும் பணியில் உங்களுக்கு என்ன பிரச்னை என்பதை முதலில் கண்டறிய வேண்டும். தொடர்ந்து எல்லா திங்கள் கிழமைகளிலும் பணிக்குச் செல்வதற்கு ஆர்வம் இல்லை என்றால், நிச்சயம் அது இயல்பான விஷயம் இல்லை. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதன் அறிகுறிதான் இது. வேலையில் உங்களை ஆர்வம் இழக்கச் செய்யும் விஷயங்கள் என்னென்ன, நபர்கள் யார் யார் என்று ஒரு பட்டியல் போடுங்கள். அந்தப் பிரச்சனை தீர்வதற்கான குறுகிய கால, நீண்ட காலத் தீர்வுகள் என்னென்ன என்று கண்டுபிடியுங்கள். உங்களின் தற்போதைய நிலையை உணர்ந்து நடைமுறை சாத்தியப்படி அதற்கான தீர்வுகளைச் செயல்படுத்துங்கள்.

திங்கள் கிழமையை ஒரு நாள் முன்பே எதிர்கொள்ளுங்கள்

திங்கள் கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதால் அந்த வாரம் முழுக்க செய்து முடிக்க வேண்டிய வேலைகளைத் திட்டமிடுவது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, வழக்கமான பணிகளைச் செய்வது என்று கடுமையான வேலைப்பளு இருக்கக்கூடும். திங்கள் காலையில் வந்து அமர்ந்துகொண்டு ‘என்ன செய்வது?’ எனக் கையைப் பிசைந்துகொண்டு இருக்காமல், சனிக்கிழமை வேலையை முடித்துவிட்டு செல்லும்போதே, திங்கள் கிழமைப் பணிகளுக்கான முன் தயாரிப்பைச் செய்துவிடுங்கள்.

அதற்கு வாய்ப்பு இல்லை எனில் குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் அமர்ந்து, மறு நாளையும்  அந்த வாரத்தையும் எப்படிச் சமாளிப்பது எனப் பணிகளைத் திட்டமிட்டு வகுத்துக்கொள்ளுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் காலையில் பணிக்குச் சென்று அமர்ந்து பதற்றம் இன்றி பணிகளைச் செய்ய முடியும். பதறாமல் செய்யும் காரியமே பாதி வெற்றி மாதிரிதான்.

உற்சாகத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்

திங்கள் கிழமை தாமதமாக எழுந்து அடித்துப்பிடித்து அலுவலகத்துக்குப் போகாமல், கொஞ்சம் முன்பே எழுந்து உடற்பயிற்சி, தியானப் பயிற்சி போன்றவை செய்துவிட்டு, குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். சரியான நேரத்தில் வேலையைத் தொடங்குவதே அதைப் பாதி வெற்றியாக முடித்தது போலத்தான். எனவே, திட்டமிட்டு பணிகளைத் தொடங்குங்கள்.

கடினமானப் பணிகளை பிறகு செய்யலாம் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், அது தவறு. காலையில்தான் நம் உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். எனவே, கடினமான வேலைகளைக் காலையில் வந்ததும் செய்துவிடுங்கள். குறிப்பாக, உங்களுக்கும் உங்கள் நிறுவனத்துக்கு உடனடியாகப் பணத்தையோ நற்பெயரையோ ஈட்டித்தரும் வேலை என்றால் அதைத்  தாமதிக்காமல் செய்துவிடுங்கள். மேலும், அந்த வாரம் முழுதும் செய்ய வேண்டிய பணிகளைத் தொகுத்துக்கொண்டு, அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்று வரிசைப்படுத்தி திட்டமிடுங்கள்.

பணியிடத்தில் மகிழ்ச்சியை உருவாக்குங்கள்

ஞாயிறு மாலை அமர்ந்து வரும் வாரத்துக்கான பணிகள் என்னென்ன என்று திட்டமிடும்போது, இந்த வாரம் செய்ய வேண்டிய பணிகளில் சுவாரஸ்யம் சேர்க்கும்படியாக என்னென்ன செய்யலாம் என முடிவு செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயம் ஒன்றை அந்த வாரத்துக்கான வேலைத்திட்டத்தில் சேர்ப்பது நல்லது. உதாரணமாக, அந்த வாரத்தின் ஏதேனும் ஒரு மாலையில் உடன் பணிபுரிபவர்களை ஒன்று சேர்க்கும் ஒரு கெட்டூகெதராக இருக்கலாம். உடன் பணிபுரியும் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டமாக இருக்கலாம். உற்சாகம் தரும் புதிய அசைன்மென்ட்டாக இருக்கலாம். இப்படி சுவாரஸ்யமான, உற்சாகம் தரும் விஷயம் ஒன்றை வாரம் ஒருமுறை செய்தாலே வேலை மீதான ஆர்வம் தன்னால் பெருகும்.

உற்சாகம் தரும் உடைகளைத் தேர்ந்தெடுங்கள்

திங்கள் கிழமைகளில் மனதுக்குப் பிடித்த, உற்சாகம்கொள்ளவைக்கும் உடைகளை அணிவது நமது தன்னம்பிக்கையைத் தூண்டும். நம்மைப் பற்றிய பெருமிதமான உணர்வை அதிகரிக்கும்.

நேர்மறை எண்ணங்கள்

எப்போதுமே நேர்மறை எண்ணங்கள் மிகவும் அவசியம். உங்களைப் பற்றி, உங்கள் வேலையைப் பற்றி, உங்கள் நிறுவனத்தைப் பற்றி, உடன் பணிபுரிபவர்கள் பற்றி நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். அது, வேலை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். அது நமக்கு மட்டும் அல்ல நாம் பணி செய்யும் சூழலுக்கே மிகச் சிறந்த உற்சாகத்தை வழங்கும்.

மனித உறவுகள் முக்கியம்

நாம் பணிபுரியும் சூழலில் பலவிதமான மனிதர்கள் இருப்பார்கள். சிலரை நமக்குப் பிடிக்கும். சிலருக்கு நம்மைப் பிடிக்கும். ஆனால், இவற்றை எல்லாம் கடந்து மனித உறவுகள் மிகவும் முக்கியம் என்பதை உணருங்கள். எனவே, அனைவரையும் அனுசரித்தும் அரவணைத்துச் செல்லுங்கள். முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை இருக்கட்டும். ஈகோ இல்லாமல் அனைவரிடமும் உற்சாகமாய், அன்பாய் பழகுங்கள்.  விட்டுக்கொடுத்து டீம் ஸ்ப்ரிட் உடன் பணியாற்றுங்கள். தவறுகளுக்கு, தோல்விகளுக்கு நேர்மையாகப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். உடன் பணிபுரிபவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள். நன்றி, மன்னிப்பு (Thanks & Sorry) என்ற இரண்டு மந்திரச் சொற்கள் எல்லாவற்றையும் சமாளிக்கும் மகத்தான ஆயுதங்கள். அவற்றை தயக்கமின்றி தாராளமாய் உபயோகியுங்கள்.

சிறிய இலக்குகள், பெரிய இலக்குகள் அவசியம்

உங்கள் பணியில் சிறிய, பெரிய இலக்குகளை உருவாக்குங்கள். இன்று இந்த வேலையைச் செய்ய வேண்டும். இந்த வாரத்துக்குள் இந்தந்த வேலைகளைச் செய்ய வேண்டும். இந்த மாதத்துக்குள் இவ்வளவு விஷயங்கள் செய்திருக்க வேண்டும். இந்த வருடத்துக்குள் இப்படியான நிலைக்குச் சென்றிருக்க வேண்டும் என்று சிறிய இலக்குகள், பெரிய இலக்குகளை வகுத்துக்கொள்ளுங்கள். இது நாம் செல்ல வேண்டிய பாதை என்ன, பயணம் என்ன என்ற தெளிவை நமக்கு உருவாக்கும். மேலும், எந்தச் சூழலிலும் நம்மை உற்சாகம் குன்றாமல் வைத்திருக்கும். சிறு சிறு வெற்றிகளைச் சுவைக்கும்போது மனதில் உற்சாகம் பெருகும். பெரிய விஷயங்களை செய்வதற்கான ஊக்கம் அதிகரிக்கும்.

இலக்கை நோக்கிப் படிப்படியாக முன்னேறுங்கள்

ஒவ்வொரு நாளும் வாரமும் திட்டமிட்ட வேலைகளைத் திட்டமிட்டபடி முடிக்கப் பழகுவது அவசியம். சில வேலைகளுக்கு அதிகம் உழைக்க வேண்டியது இருக்கும். மனம் தளராமல், உற்சாகம் குன்றாமல் உழைப்பைச் செலுத்துங்கள். உங்கள் இலக்கை நோக்கி நேர்மையான வழியில் நாள்தோறும்  முன்னேறுங்கள். படிப்படியாக இலக்கை நோக்கி முன்னேறும்போது ஒரு கட்டத்தில் நாம் நினைத்த இடத்தில் அமர்ந்திருக்க முடியும்.

தொகுப்பு : லயா

Related Stories: