×

ஐஸ்வர்யா லட்சுமி ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி படு பிஸியாக சத்தமே இல்லாமல் நடித்துவருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். சாய் பல்லவி, அதிதி ஷங்கர் போல இவரும் மருத்துவம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது மருத்துவம்  பயின்றிருந்தாலும்,  மாடலிங் மீது   இவருக்கு உள்ள  ஆர்வத்தால்,  2014இல்  ஒரு மாடலானார். அதைத் தொடர்ந்து மாடலிங் துறையில்  ஈடுபட்டு வந்த  ஐஸ்வர்யா,  அடுத்தக்கட்டமாக,  அழகு சாதன பொருட்கள்,  ஆடை  விளம்பரங்கள். ஊட்டச்சத்து உணவுகள்,  எலக்ட்ரானிக்ஸ்  பொருட்கள்  போன்றவற்றிற்காக விளம்பரப் படங்களில் நடிக்கத்  தொடங்கினார்.

2017 இல்  நிவின் பாலி நடித்த “நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா” என்ற  மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்புக்கிட்ட,  மலையாள திரையுலகில் நடிகையாக  அறிமுகமானார்.  அதைத் தொடர்ந்து  மாய நதி, வரதன், பிரதர்ஸ் டே என  பல வெற்றிப் படங்களில் நடித்து மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை  தக்க வைத்துக் கொண்ட  ஐஸ்வர்யா லட்சுமி.


ஐஸ்வர்யா  லட்சுமி தனது ஃபிட்னஸ்  ரகசியங்கள்  குறித்து  பகிர்ந்துகொள்கிறார்:

“நான்  அடிப்படையில்  ஒரு மருத்துவர்  என்பதால், ஆரோக்கியத்தின் அவசியமும்,  உடற்பயிற்சிகளின் முக்கியத்துவமும்  நன்கு அறிவேன். எனவே, அப்போதிலிருந்தே சிறு சிறு  உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக  வைத்திருந்தேன். திரைத்துறைக்குள் வந்தபிறகு,  உடலை  ஃபிட்டாக  வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதனால்,   ஜிம் சென்று  உடற்பயிற்சி செய்வதைக்  கட்டாயமாக்கிக் கொண்டேன். அப்போதுதானே  ரசிகர்கள்  நம்மை  ஏற்றுக் கொள்வார்கள்.

பொதுவாக, உடற்பயிற்சி செய்வதை அனைவருமே பின்பற்ற வேண்டும். அப்போதுதான்  ஆரோக்கியமாகவும்,  ஃபிட்டாகவும் இருக்க முடியும். எனவே, நமது  தினசரி  வேலைகளில்  உடற்பயிற்சி செய்வதையும் கட்டாயம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.  அதுபோன்று, உடற்பயிற்சி  எவ்வளவு முக்கியமானதோ அந்தளவுக்கு நாம் உட்கொள்ளும் உணவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் அதிலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

வொர்க்கவுட்ஸ்

தினசரி  காலையில்  ஜிம்முக்கு  சென்றுவிடுவேன். குறைந்தபட்சம்  1 - 3  மணி நேரமாவது  உடற்பயிற்சிகள்  செய்வேன்.  அதில்  கார்டியோ  உடற்பயிற்சிகள்  முதல்  மேல் உடல் பயிற்சிகள் வரை அனைத்தையும் வொர்க்கவுட்  செய்கிறேன். தினசரி காலை எழுந்ததும் ஜிம்முக்குச் செல்லாவிடில் எதையோ இழந்ததைப் போல் அந்த நாளே வெறுமையாக இருக்கும். அந்த அளவுக்கு ஜிம் எனக்கு பழகிவிட்டது. தினசரி ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிறேன். வெளியூர் சென்றாலும் ஹோட்டல்களில் உள்ள ஜிம்களைத் தேடிச் சென்றுவிடுவேன். எனது  ஜிம் டிரைனர்  ஜிபின் ராஜ்   வழங்கும்  ஆலோசனைகள் அனைத்தையும்  முறையாக பின்பற்றி வருகிறேன்.

உணவு  முறை

காலை எழுந்தவுடன்  தினசரி  மூன்றிலிருந்து நான்கு டம்ளர்  வெதுவெதுப்பான  தண்ணீர்   அருந்தி விடுவேன்.  தினசரி வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தும்போது, நமது செரிமான சக்தி சீராகிறது. சிறிது நேரம் கழித்து  2 அவித்த  முட்டையும்,  1 கப் பழக்கலவையும் எடுத்துக்கொள்வேன். இதனால், வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியா தனது வேலையைச் செய்ய துரிதமாகிறது.

பின்னர்,   காலை உணவாக   பச்சைப் பயறு,   கொண்டைக்கடலை , காராமணி  போன்ற  மூளைக்கட்டிய தாணியங்கள் 1 கப்பும்,   நட்ஸ்  வகைகள் சேர்த்து பாலில் காய்ச்சிய ஓட்ஸ் கஞ்சியும்  எடுத்துக் கொள்வேன்.

அதன் பின்னர்,  மதிய உணவாக,  வறுத்த காய்கறிகளும்,  பருப்பு வகைகளும்  எடுத்துக் கொள்வேன்.  நமது இந்திய பாரம்பரிய உணவான  அரிசி சாதம்,  கோதுமையில்  தயாரிக்கும்  சப்பாத்தி, ஆகியவற்றை  சாப்பிடுவதே  இல்லை. அதே  சமயம், எனக்கு மிகவும் பிடித்த உணவுகளான  பிட்சா,  சாக்லெட்ஸ்,  ஐஸ்க்ரீம்  ஆகியவற்றை  மட்டும்  தவிர்க்கவே  முடிவதில்லை. ஆனால்,  இவற்றைச் சாப்பிடும் போது  கூடுதலாக  உடற்பயிற்சிகள்  செய்துவிடுவேன்” என்றார்.

Tags : Aishwarya ,Lakshmi ,
× RELATED இயக்குநர் சங்கரின் மகள் திருமண...