×

அதிமுக ஆட்சியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டிய தடுப்பணை ஒரு மாதத்தில் உடைந்த நிலையில் ரூ.60 கோடியில் நடக்கும் ஒரத்தூர் தடுப்பணை கட்டுமான பணியிலும் குறைபாடு இருப்பதாக புகார்

* ஒப்பந்த நிறுவனத்துக்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ்* ரூ.32 கோடியில் வாயலூர் தடுப்பணை கட்டுமான தரத்திலும் கேள்விக்குறி* விசாரணை செய்ய அதிகாரிகள் குழு அமைப்புசென்னை: அதிமுக ஆட்சியில் தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டிய ஒரு மாதத்தில் உடைந்த பணிகளை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வரும் ஒரத்தூர் தடுப்பணை கட்டுமான பணியில் குறைபாடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரூ. 32 கோடியில் வாயலூர் தடுப்பணை கட்டுமான பணியில் புகார் எழுந்துள்ளதால், 2 தடுப்பணை கட்டுமான பணிகள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.   விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் மற்றும் கடலூர் மாவட்டம் திரிமங்கலம் இடையே ரூ.25.35 கோடியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இது, கடந்த டிசம்பர் 20ம் தேதி திறக்கப்பட்டன. 14 அடி உயரம், 650 அடி நீளம் கொண்ட இரண்டு மாவட்ட எல்லையிலும் தலா 3 ஷட்டர்கள் உடன் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த தடுப்பணை திறந்து ஒரு மாதம் ஆன நிலையில் கடந்த ஜனவரி 23ம் தேதி தடுப்பணையின் கரைப்பகுதி திடீரென உடைந்தது. இது தொடர்பாக,சென்னை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் கே.அசோகன், பெண்ணையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் என்.சுரேஷ், கீழ்பெண்ணை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் எ.ஜவஹர், கீழ்பெண்ணை ஆறு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பி.சுமதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து தடுப்பணை கட்டிய ஒப்பந்த நிறுவனத்தை ‘கருப்பு பட்டியலில்’ சேர்த்திருக்க வேண்டும். ஆனால்,  ஒப்பந்ததாரர் அதிமுக அரசுக்கு நெருக்கமானவர் என்பதால் அந்த நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அந்த ஒப்பந்த நிறுவனத்துக்கு பரிசாக திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உட்பட 4 மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளுக்கும், தடுப்பணை கட்டுமான பணிகளும் ஒப்படைக்கப்பட்டன.அதில், ஒரு பணியாகத் தான் இந்த ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.60 கோடியில் ஒரத்தூர்-ஆரம்பாக்கம் ஏரி மற்றும் ஒரத்தூர் கிளையாற்றில் உள்ள தரிசு நிலப்பகுதிகளை இணைத்து 760 ஏக்கர் பரப்பளவில் புதிய தடுப்பணை கட்டுமான பணி கடந்த ஜனவரியில் தொடங்கியது. இந்த புதிய தடுப்பணை 340 மில்லியன் கன அடி உபரி நீர் அம்மணம்பாக்கம், படப்பை, மணிமங்கலம் ஏரிகளில் சேமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த தடுப்பணை கட்டுமான பணி 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், கட்டுமான பணியில் குளறுபடி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த தடுப்பணை அமைக்கப்படும் போது, முதலில் பவுண்டேஷன் வரை நீர் உட்புகும் நீளம் (scour depth) எவ்வளவு என்பதை கணக்கிட்டு கான்கிரீட் அமைத்து இருக்க வேண்டும். அதாவது மணலில் நீர்  எவ்வளவு தூரம் உள்ளே புகுந்து போகிறது என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப ஆழம் தோண்டி கான்கிரீட் போட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் 2 அடி ஆழத்திற்கு களிமண் போட்டு அதற்கு மேல் கான்கிரீட் போட்டிருப்பதாக தெரிகிறது. இதனால், தடுப்பணையின் கீழ் பகுதி நொறுங்கி விட்டதாக தெரிகிறது. இதனால், தடுப்பணை எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நாமக்கல்லை சேர்ந்த அந்த ஒப்பந்த நிறுவனத்துக்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் சார்பில் தடுப்பணையில் அவசர, அவசரமாக கட்டுமான பணியில் உள்ள குறைபாட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு செய்தால் கூட தடுப்பணையை தரமானதாக மாற்ற முடியாது என்று தெரிகிறது. அந்த தடுப்பணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்று பொதுப்பணித்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதே போன்று கல்பாக்கம் அருகே பாலாற்றின் குறுக்கே வாயலூரில் ரூ.32 கோடியில் தடுப்பணை கட்டுமான பணி கடந்த 2019ல் முடிவடைந்தது. இந்த  தடுப்பணை பாலாற்றில் தரைக்கு கீழ் 8.5 மீட்டர் ஆழத்திலும், தரைக்கு மேல் 1.2 மீட்டம் உயரம் மற்றும் 1,189 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டது. இந்த தடுப்பணை கட்டியதில் குறைபாடுகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் தடுப்பணையில் நீர் கசிவு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும், தடுப்பணையில் தடுப்பு சுவர்கள் விரிசல் ஏற்பட்டு எந்த நிலையிலும் உடைந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தரமற்ற முறையில் நடந்த கட்டுமான பணிதான் காரணம். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆகியார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குழு தடுப்பணை பணி நடந்த பகுதிகளில் நேரில் விசாரணை நடத்தியது.  இந்த விசாரணை அறிக்கை விரைவில் அரசுக்கு தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒப்பந்த நிறுவனத்தை காப்பாற்றிய அதிமுக அரசுதென்பெண்ணையாற்றில் தடுப்பணை உடைந்த விவகாரத்தில் கட்டுமான பணியில் தரக்குறைவு காரணம் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் மீது தான் பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. ஆனால், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிமுக அரசு காப்பாற்றியது. இதனால் தான் அந்த நிறுவனம் ஒரத்தூர் தடுப்பணை கட்டிய விவகாரத்தில் தனது சித்து விளையாட்டை காட்டியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனத்தை பிளாக் லிஸ்ட் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. கட்டுமான பணியை ஆய்வு செய்ய கோரிக்கைசென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் கடந்த 2013ல் 100 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் 700 குடியிருப்புகள் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டிடத் தொகுதிக்கும் 100 குடியிருப்புகள் வீதம் 7 கட்டிடத் தொகுதிகளில் 700 குடியிருப்புகளை உள்ளடக்கியதாகவும் ஒவ்வொரு குடியிருப்பும் 692 சதுர அடி கட்டிடப் பரப்பளவில், 2 படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கடந்த 2017ல் கட்டப்பட்டது. இந்த குடியிருப்புகளில் சி 3 பிளாக்கின் தரைதளத்தில் கார் மற்றும் இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசு ஊழியர் ஒருவரின் கார் கடுமையாக சேதமடைந்தது. இதை தொடர்ந்து மேற்கூரை உடனடியாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இந்த அடுக்கு மாடி குடியிருப்புகளில் பெரும்பாலான இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இந்த குடியிருப்பின் உறுதி தன்மையை மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. ஆனால், இந்த விவகாரத்தை அப்போதைய அரசு வெளியில் கொண்டு வராமல் மறைத்து விட்டது. தற்போது மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் 4 மருத்துவ கல்லூரி கட்டுமான பணியும் அந்த நிறுவனத்திடம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அந்த நிறுவனம் மேற்கொண்ட கட்டுமான பணி தரத்தில் கேள்வி எழுந்துள்ளது. எனவே, அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள பணிகள் முழுவதை ஆய்வு செய்யவும் மற்றும் அந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. தடுப்பணை கட்டுவதில் அனுபவம் இல்லாதவர்களிடம் ஒப்படைப்புதடுப்பணை  கட்டுமான பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம், ஏற்கனவே இப்பணியை செய்து  இருப்பதற்கான சான்று சமர்பித்தால் மட்டுமே ஒப்பந்த நிறுவனத்துக்கு  டெண்டரில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆனால்,  அனுமதியில்லாத ஒப்பந்த  நிறுவனங்களையும் சில நேரங்களில் விதிமுறை மீறி அனுமதிப்பதாக தெரிகிறது.  இதனால் தடுப்பணை கட்டுமான பணியில் தரம் கேள்விக்குறியாகியுள்ளது. இது போன்ற  ஒப்பந்த நிறுவனத்தால் தான் தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை இடிந்து  விழுந்ததற்கு முக்கிய காரணங்கள் என்று கூறப்படுகிறது.  1 ஆண்டு வரைபராமரிக்க வேண்டும்தடுப்பணை கட்டும் ஒப்பந்த நிறுனங்கள் 1 ஆண்டு வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். ஆனால், ஒப்பந்த நிறுவனங்கள் பில் செட்டில் செய்யப்பட்ட பிறகு தடுப்பணையில் சிறு பிரச்னை இருந்தால் கூட கண்டு கொள்வதில்லை. இதனால் பெருமழை காலங்களில் அந்த தடுப்பணை சில நேரங்களில் உடைந்து விடுகிறது. இப்படி தான் திருவள்ளூரில் கடந்த 2015ல் தடுப்பணை ஒன்று உடைந்தது. இதே போன்று திருவண்ணாமலை போளூர் அருகேயும் தடுப்பணை உடைந்தது. கடந்த ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணைகள் தரம் வாய்ந்ததாக இருக்கிறதா, 1 ஆண்டுக்கு ஒப்பந்த நிறுவனம் பராமரிப்பு பணி மேற்கொண்டிருக்கிறதா என்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்….

The post அதிமுக ஆட்சியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டிய தடுப்பணை ஒரு மாதத்தில் உடைந்த நிலையில் ரூ.60 கோடியில் நடக்கும் ஒரத்தூர் தடுப்பணை கட்டுமான பணியிலும் குறைபாடு இருப்பதாக புகார் appeared first on Dinakaran.

Tags : Tenpenna River ,AIADMK ,Orathur barrage ,Vayalur barrage ,AIADMK government ,Dinakaran ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...