×

பாதிக்கப்பட்ட மாணவிகள் இ-மெயில் மூலம் புகார் அளிக்கலாம்; ஹரிபத்மன் உள்ளிட்ட 4 பேரை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது: கலாஷேத்ரா இயக்குனருக்கு மகளிர் ஆணைய தலைவி உத்தரவு

சென்னை: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் ஹரிபத்மன் உட்பட 4 பேரை கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என்று கலாஷேத்ரா இயக்குனர் ரேவதிக்கு, மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் இ-மெயில் மூலம் தனக்கு புகார் அளிக்கலாம் என்றும், புகாரின் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறினார்.
 
கலாஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி முன்னிலையில் கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமசந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, கல்லூரி உள்ளீட்டுப் புகார் குழு(ஐசிசி கமிட்டி) உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் இன்று காலை ஆஜராகினர். அப்போது கல்லூரி மாணவிகள், பேராசிரியர் உட்பட 4 பேர் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 40 நிமிடங்கள் விளக்கமும், அதற்கான அறிக்கையையும் ஆணைய தலைவர் குமாரியிடம் அளித்தனர்.
 
அதை தொடர்ந்து, எழிலகத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் விசாரணைக்கு சென்ற போது இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் இல்லாத காரணத்தால் இன்று நேரில் விளக்கம் கேட்க அழைத்திருந்தோம். அவர்கள் இந்த நான்கு பேர் மீதும் இதுவரை எந்த புகார் வரவில்லை என்றும் கூறினர். கலாஷேத்ரா  கட்டமைப்பு குறித்தும் அங்கு படிக்கக்கூடிய மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் அறிவுறுத்தி உள்ளோம்.

அந்த மாணவிகள் தேர்வு எழுத வேண்டும். அவர்கள் ஆப்லைன் வழியாக தேர்வு எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர் அதையும் இயக்குனரிடம் அறிவித்துள்ளோம். மாணவிகள் இதுவரை பாலியல் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்பது குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ள ஐசிசி கமிட்டியின் உள்ளிட்டு புகார் குழு அறிக்கையை கேட்டுள்ளோம். மேலும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூன்று நபர்களையும் கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது என்றும் கூறியுள்ளோம்.
 
ஐசிசி கமிட்டி வலுப்படுத்தவும் அடுத்து வரக்கூடிய மாணவிகளுக்கு இந்த கமிட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவித்துள்ளோம். பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம் மேலும் ஐசிசி கமிட்டியின் அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளோம். அதன் பிறகு அது குறித்து முடிவெடுக்கப்படும்.

தேர்வு குறித்து மாணவிகளுக்கு இன்று மாலை சுற்றறிக்கை அனுப்பப்படும் என இயக்குனர் கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும் புகார்களை தெரிவிக்க சம்பந்தப்பட்ட ஆணையத்தின் இ-மெயில் மற்றும் தொலைபேசி எண்களையும் மாணவிகளுக்கு கொடுத்துள்ளோம். புகார் அளிக்கும் மாணவிகள் ரகசியங்கள் காக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Haripadman ,commission ,Kalashetra , Aggrieved students can file a complaint through e-mail; 4 people including Haripadman should not be allowed inside the college: Women's commission chairperson orders Kalashetra director
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...