×

திருப்பாச்சூர் அரசு பள்ளியில் இருந்து செயற்கைக்கோள் தயாரித்து 13 மாணவ, மாணவியர் அசத்தல்: வாழ்வில் சாதிக்க தூண்டுதலை ஏற்படுத்தியதாக பெருமிதம்

இன்றைய மாணவ செல்வங்களே நாட்டின் நாளைய தலைவர்கள் என்னும் பொன் மொழிக்கேற்பவும், அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, நற்பெருமையின் அடையாளம் என்பதை மெய்ப்பிக்கும் வகையிலும் பல்வேறு துறைகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனைகள் புரிந்து வருகின்றனர். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது செயற்கைக் கோள் தயாரிக்கும் திட்டம்.  ராமேஸ்வரத்தில் இயங்கும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து இந்தியா முழுவதும் 5 ஆயிரம் மாணவர்களை கொண்டு 150 சிறிய செயற்கை கோள்கள் தயாரிக்கும் உலக சாதனை நிகழ்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.   

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியை எம்.ஜெகதீஸ்வரி, இதுபற்றி அறிந்து பள்ளி தலைமை ஆசிரியர்  எஸ்.ஏ.தாமோதரனிடம் தெரிவித்துள்ளார். நம் பள்ளியும் இந்த திட்டத்தில் இடம்  பெற வேண்டும் என தெரிவித்ததற்கு தலைமை ஆசிரியர் சம்மதம்  தெரிவித்துள்ளார். அதன்பேரில், இந்த பள்ளியின் 6ம் வகுப்பு மாணவி எல்.நிஷா, 7ம் வகுப்பு மாணவர்கள் சாய்சரன், கவியரசு, சகீத், மாணவிகள் ஜானவி, சி.ஜான்சி, 9ம் வகுப்பு மாணவன் சஞ்சய், மாணவிகள் வி.கீர்த்தி, அன்னபூரணி, எஸ்.அனுஜா சிவானி, பி.இவாஞ்சிலின் மற்றும் 10ம் வகுப்பு மாணவிகள் கே.ருக்கு, எஸ்.சுனிதா வின்சி ஆகிய 13 பேர் இதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து, செயற்கைக்கோள் விஞ்ஞானிகளான சுரேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் இணைந்து செயற்கைக்கோள் அறிவியல் தொழில்நுட்பத்தை அரசு பள்ளி மாணவர்களுக்கு இணையவழி மூலம் கற்பித்தனர். 2 மணி நேரம் வகுப்புகள் முழுவதையும் தமிழில் எடுத்து மாணவ, மாணவிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு கற்றுக் கொண்டதில், அவர்களிடம் கேள்வி கேட்டு அதற்கு விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தது மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

அதை தொடர்ந்து இந்த 13 மாணவ, மாணவியர் உள்பட 5 ஆயிரம் மாணவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட 150 சிறிய செயற்கை கோள்கள் கடந்த மாதம் 19ம் தேதி விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சி, மாமல்லபுரத்தில் நடந்தது. இதில், திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப்  பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர் என்பது பெருமைக்குரிய  நிகழ்வாகும். இதுகுறித்து செயற்கைக்கோள் தயாரித்த மாணவ, மாணவியர் கூறியதாவது:
கடை கோடியில் பிறந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகளான நாங்களும் இந்த கின்னஸ் சாதனையில் பங்கேற்றதை பெரிய பாக்கியமாக கருதுகிறோம். ராக்கெட் என்றால் என்ன என்பது குறித்த அடிப்படை தகவல்கள் முதல் கொண்டு அதன் செயல்பாடுகள் வரை அனைத்தையும் விஞ்ஞானிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். வகுப்புகளில் அதிக கவனம் செலுத்தி அதனை நன்றாக படித்து அதன் மூலமாகவே நாங்கள் தேர்வு செய்யப்பட்டோம்.

எங்களுக்காக இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கும், மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாகியும், தமிழ்நாடு கல்விகொள்கை குழுவின் உறுப்பினருமான சுல்தான் இஸ்மாயில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் பேரன்கள் ஷேக் சலீம், ஷேக்தாவூத், பேஸ் ஜோன் இந்தியா அறக்கட்டளையின் நிர்வாகி டாக்டர் ஆனந்த மோகலிங்கம் ஆகியோருக்கும் நன்றி.  அனைத்து மாணவ, மாணவிகளையும் ஒருங்கிணைத்து தேவையான தகவல்களை அளித்து அழைத்துச் சென்ற திருப்பாச்சூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை கே.ஜனனிக்கும் நன்றி என்றனர்.


* நேரத்தின் முக்கியத்துவம் செயற்கைக்கோள் பயிற்சி வகுப்பின்போது, நேரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள்  கற்றுக் கொண்டதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். விஞ்ஞானிகளுக்கு நேரம்  என்பது ரொம்ப முக்கியம். ஒவ்வொரு வினாடியும் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம்  வாய்ந்தது என்பதை அவர்கள் நடந்து கொண்ட விதத்தில் எங்களுக்கு புரிய வைத்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

* கூகுள் உதவியது ராக்கெட் சம்பந்தமான தகவல்களை கணித ஆசிரியர் ஜெகதீஸ்வரியின் ஆலோசனைப்  படி படித்தோம். கூகுள் வலைதளத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ராக்கெட் சம்பந்தமான வீடியோக்களையும், இதில் வரும் தகவல்களையும் ஆசிரியை அனுப்ப அதையும் தாங்கள் தெரிந்து கொண்டோம். எங்கள் சந்தேகத்திற்கு விஞ்ஞானிகள் தெளிவான விளக்கம் அளித்தனர். எங்களை தொடர்ந்து ஊக்குவித்தனர்.




Tags : Tiruppachur Government School , 13 students from Tiruppachur government school made a satellite.
× RELATED 18 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு