×

ஐதராபாத் அணிக்கு எதிராக 72 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி: சாஹல் ஆட்ட நாயகன்

ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி 72 ரன் வித்தியாசத்தில் வென்றது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஜெய்ஸ்வால், பட்லர் இருவரும் ராஜஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி, பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு ஐதராபாத் பந்துவீச்சை சிதறடித்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 5.4 ஓவரில் 85 ரன் சேர்த்து மிரட்டினர். 20 பந்தில் அரை சதம் விளாசிய பட்லர் 54 ரன் எடுத்து (22 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) பரூக்கி பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்து அதிரடியை தொடர்ந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தது. ஜெய்ஸ்வால் 54 ரன் (37 பந்து, 9 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 2, ரியான் பராக் 7 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். சஞ்சு சாம்சன் 55 ரன் (32 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி நடராஜன் வேகத்தில் அபிஷேக் வசம் பிடிபட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது. ஹெட்மயர் 22 ரன், அஷ்வின் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் பரூக்கி, நடராஜன் தலா 2, உம்ரான் மாலிக் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது ஐதராபாத் அணி. டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி இருவரும் டக் அவுட்டாகி வெளியேற, ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ஹாரி புரூக் 13, வாஷிங்டன் சுந்தர் 1, கிளென் பிலிப்ஸ் 8 ரன் எடுத்து அணிவகுக்க, ஐதராபாத் 9.3 ஓவரில் 48 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

ஓரளவு தாக்குப்பிடித்த மயாங்க் அகர்வால் 27 ரன், அடில் ரஷித் 18 ரன் எடுத்து சாஹல் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். புவனேஷ்வர் 6 ரன்னில் அவுட்டானார். ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து, 72 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அப்துல் சமத் 32 ரன் (32 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), உம்ரான் மாலிக் 19 ரன்னுடன் (8 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் யஜ்வேந்திர சாஹல் 4, போல்ட் 2, ஹோல்டர், அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சாஹல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.




Tags : Rajasthan Royals ,Hyderabad ,Chahal , Rajasthan Royals win by 72 runs against Hyderabad: Chahal man of the match
× RELATED ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜநடை: லக்னோவை வீழ்த்தி 8வது வெற்றி