×

கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ஹரிபத்மன் தலைமறைவு: தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை

சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட பேராசிரியர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த சில நாட்களாக கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் எவ்வித புகாரும் அளிக்கவில்லை எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 31ம் தேதி கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி, தனது 3 தோழிகளுடன் சேர்ந்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்புகாரில், கலாஷேத்ராவில் தாங்கள் படிக்கும் காலத்தில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் செல்போன் வாயிலாக ஆபாச சைகைளால் அறைக்கு வரவழைத்து அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என மாணவிகள் குறிப்பிட்டிருந்தனர். இப்புகாரின்பேரில், அடையாறு மகளிர் காவல்நிலைய போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பெண்ணின் மாண்புக்கு களங்கம் விளைவித்தல் உள்பட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட உதவி பேராசிரியர் ஹரிபத்மனை தேடி வந்தனர். முதல்கட்ட விசாரணையில், அவர் ஐதராபாத்தில் நடைபெறும் ஒரு தனியார் கலாசார நிகழ்ச்சியில், கடந்த 30ம் தேதி மாணவ-மாணவிகளுடன் பங்கேற்ப சென்றிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அவரை செல்போனில் அடையாறு மகளிர் காவல்நிலைய போலீசார் தொடர்பு கொண்டு, சென்னையில் நடைபெறும் பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறியுள்ளனர். மேலும், அவரை விசாரணைக்கு பிறகு கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற தனியார் கலாசார நிகழ்ச்சியை முடித்துவிட்டு, நேற்று காலை கலாஷேத்ரா மாணவ-மாணவிகள் சென்னைக்கு திரும்பினர். இதில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மட்டும் தலைமறைவாகி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்போது, தன்னை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் இருந்து தப்பி, முன்ஜாமீன் பெறுவதற்காக உதவி பேராசிரியர் ஹரிபத்மன் தப்பி ஓடி தலைமறைவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, தலைமறைவான ஹரிபத்மனை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே, பாலியல் புகார் தொடர்பாக சாட்சிகளின் விசாரணையும் நடைபெற்று வருகிறது. சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக ஒரு தனிப்படையினர் கேரளாவுக்கு விரைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Haripadman ,Kalashetra , Professor Haripadman, who sexually harassed Kalashetra students, is absconding: Police have formed a special force and are on the hunt.
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...