×

பட்டாக்கத்திகளுடன் பதுங்கியிருந்த 7 ரவுடிகள் பிடிபட்டனர்: அம்பத்தூரில் பரபரப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே பெரிய அளவில் வழிப்பறியில் ஈடுபட பட்டாக்கத்திகளுடன் பதுங்கியிருந்த 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை கொரட்டூர் மற்றும் அம்பத்தூர் மாதனாங்குப்பம் பகுதிகளில் பட்டா கத்திகளுடன் வாலிபர்கள் சுற்றித் திரிவதாக கொரட்டூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின்பெயரில், கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் அம்பத்தூர் அடுத்த மாதனாங்குப்பம் பகுதிக்கு விரைந்தனர். அங்கு, பட்டாக்கத்திகளுடன் பதுங்கியிருந்த 7 பேரை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், மாதனாங்குப்பம் பகுதியை சேர்ந்த பிரவீன் (24), அமர்நாத் (21), சுதர்சன் (20), ஸ்ரீகாந்த் (20), ரஞ்சித் (22), யோவான் (26) மற்றும் சிவகுரு (26) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், கோயம்பேடு ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் அம்பத்தூர் பகுதியில் பெரிய அளவில் வழிப்பறி செய்வதற்காக பதுங்கி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ரவுடிகள் பதுங்கியிருந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Tags : 7 raiders nabbed with machetes: Ambattur stirs
× RELATED பால் குடித்துவிட்டு உறங்கியபோது...