×

கும்பாபிஷேக பணிகள் திமுக ஆட்சியில் வேகமாக நடைபெற்று வருகிறது; நிகழ்கால ராஜராஜசோழனாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்: அமைச்சர் சேகர்பாபு பேச்சு

சென்னை: திமுக ஆட்சியில் கும்பாபிஷேக பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் நிகழ்காலத்து ராஜராஜ சோழனாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் ேநற்று நடந்தது. கேள்வி நேரத்தில் அதிமுகவின் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், நன்னிலம் வாஞ்சியம் வாஞ்சிநாதசாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா? அதேபோல் சோழ நாட்டில் பஞ்ச ஆரண்யங்கள் என்று 5 தலங்களையும் தரிசனம் செய்யக்கூடிய வகையில் அதிகாலை முதல் இரவு வரை தரிசிக்க கூடிய ஒரேநேர் கோட்டில் 5 சிவ தலங்கள் அமைந்திருக்கிறது.

அதில் 2வது தலமான அவளிவநல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செயவ்தற்கு பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. ஆலங்குடி அபய வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு மொட்டை கோபுரம்தான் இருக்கிறது. அதற்கு ராஜ கோபுரம் அமைத்து தர வேண்டும் என கேள்வி எழுப்பி கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாவு பேசியதாவது: வாஞ்சிநாத சாமி கோவிலுக்கு ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 23 பணிகள் உபயதாரர் நிதியில் நடைபெற்று வருகின்றன. மேலும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, சூரிய ஒளியின் வாயிலாக மின்சாரத்தை பெறுகின்ற அமைப்பு, பசுமடம் போன்ற 5 பணிகள் ரூ.1.40 கோடி செலவில் அறம் சார்ந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோவிலுக்கு பாலாலயம் நடத்தப்பட்டுள்ளது. வெகு விரைவில் பணிகளை நிறைவேற்றித் தந்து கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு  பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ‘சாட்டநாதர் கோவில் என்பது பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களில் வனம் சார்ந்த இரண்டாவது கோவில். அவர்கோரிய கும்பாபிஷேக பணிகள் வருகின்ற 16ம் தேதி அன்று பாலாலயம் செய்யப்பட இருக்கின்றது. சுமார் ரூ.34.30 லட்சம் பதிப்பீட்டில் 5 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. வரதராஜ பெருமாள் கோவிலில் மொட்டை கோபுரம் இருப்பதாக தெரிவத்தார். 300 ஆண்டுகள் பழமையான கோவில் என்பதால் தொல்லியல் வல்லுனர் குழுவினரோடு ஆய்வு செய்து சாத்திய கூறுகள் இருப்பின் 3 நிலை ராஜகோபுரமாக கட்டித் தருவதற்கு முயற்சிக்கப்படும். அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, சமயபுரம் மாரியம்மன் கோவில் உட்பட 7 நிலை ராஜ கோபுரங்கள் இரண்டும், 3 நிலை ராஜகோபுரங்கள் இரண்டும் என்று 6 கோவில்களின் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கிறது. ராஜராஜ சோழன் காலத்தில் நடைபெற்ற கோவில் பணிகளுக்கு இணையாக நம்முடைய நிகழ்கால ராஜராஜ சோழனாக திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலே நடைபெற்று வருகிறது’ என பதிலளித்தார்.

திமுக உறுப்பினர் அம்பேத்குமார், ராஜராஜ சோழனின் வாரிசு பராந்தக சோழனின் மகன் விக்ரம சோழனால் கட்டப்பட்ட அரங்கநாயகி சமேத அரங்கநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் மற்றும் பக்தர்கள் தங்குவதற்கு தங்கும் விடுதி, சுற்றுவட்ட கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: ஒரு கல்லிலே 2 மாங்காய் என்பது போல் ஒரே கேள்வியில் 3 கேள்விகளை உறுப்பினர் தொடுத்து இருக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 66 கோவில்களில் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ள உபயதாரர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை  அனுமதி அளித்திருக்கிறது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 113 கோவில்கள் கடந்த ஆண்டு கும்பாபிஷேக பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டும் முதல்வர் போதிய அளவு நிதி தருவார் என்ற நம்பிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை உள்ளது.

உறுப்பினர் கோரிய கோவிலில் நிச்சயமாக 2023-24ம் ஆண்டில் கும்பாபிஷேக பணி மேற்கொள்ளப்படும். கூடுதலாக திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி கோரியுள்ளார். முதலில் தெய்வத்திற்கான பணியையும் கும்பாபிஷேகத்தையும் இறுதி செய்வோம். அதன்பிறகு பக்தர்கள் தங்கும் விடுதியும், திருமண மண்டபத்தையும் இந்து சமய அறநிலையத்துறை பரிசீலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kumbabhishekam ,DMK ,Chief Minister ,M.K.Stalin ,Rajarajacholan ,Minister ,Shekharbabu , Kumbabhishekam work is going on fast in DMK regime; Chief Minister M.K.Stalin is the current Rajarajacholan: Minister Shekharbabu's speech
× RELATED பொய்யாமொழி விநாயகர், மலையம்மன் கோயில் கும்பாபிஷேகம்