சட்டப்பேரவையில் வினா - விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அமைச்சர் சேகர்பாபு.!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று வினா - விடை நேரத்தின்போது நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜ், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விடையளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.காமராஜ் அவர்கள் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குப்பட்ட ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி திருக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்யப்படுமா?

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் : திருவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோயிலுக்கு ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 23 பணிகள் உபயதாரர் நிதியில் நடைபெற்று வருகின்றன. மேலும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, சூரிய ஒளியின் வாயிலாக மின்சாரத்தை பெறுகின்ற அமைப்பு, பசுமடம் போன்ற 5 பணிகள் ரூ.1.40 கோடி செலவில் அறம் சார்ந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திருக்கோயிலுக்கு பாலாலயம் நடந்தேறி இருக்கின்றது. ஓராண்டு காலத்திற்குள் அனைத்து பணிகளையும் நிறைவேற்றி தருவதற்கு உண்டான முயற்சியை மேற்கொள்ளும் வகையில் துறையையும், இணை ஆணையரையும் முடுக்கிவிட்டிருகிறோம். ஆகவே, வெகு விரைவில் திருப்பணிகளை நிறைவேற்றித் தந்து குடமுழுக்கு நடத்தித் தரப்படும்.

சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜ்: ஸ்ரீவாஞ்சியம் மங்களாம்பிகை உடனுறை வாஞ்சிநாத சுவாமி திருக்கோவிலுக்கு குடமுழுக்கு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி திருக்கோயிலை பொறுத்தவரை காசியை விட தீட்சம் அதிகம் என்று சொல்வார்கள். எமனுக்கென்று தனி சன்னதி உள்ள உலகத்திலேயே ஒரே திருக்கோவில் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில். எமனே ஈசனுக்கு வாகனமாக அமைந்திருக்கின்றது. வயல்வெளியும், நாணல் காடுகளும் நிறைந்த அந்த பகுதியில் பாம்பு கடித்து எவருமே இறந்தது கிடையாது. அந்த அளவிற்கு பிரசித்திப் பெற்ற தலமான ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி திருக்கோயிலுக்கு திருப்பணி செய்வதற்காக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டது போல ரூ.94.65 லட்சம் செலவில்  உபயதாரர்கள் நிதியின் மூலம் திருப்பணிகள் தொடங்கி இருக்கிறது. அது மெதுவாக நடைபெறுகிறது. திருப்பணிகள் 06.03.2022 அன்று பாலாலயம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. ஓராண்டாகியும் இதுவரை 20 சதவீத பணிகள் தான் நடந்திருக்கிறது. அதனை விரைவு படுத்த வேண்டுவது தான் எனது கோரிக்கையாகும். அது மட்டுமல்லாமல் கோயிலின் வெளிச்சுற்று பிரகாரத்திற்கு கருங்கல் பதிக்கும் திருப்பணியை அறநிலையத்துறை நிதியின் மூலம் செய்து தர வேண்டுமென கோருகிறேன்.

அமைச்சர்:  இந்த திருக்கோயிலை பொறுத்தளவில் 3 சுற்று பிரகாரங்கள் அமைந்து இருக்கிறது. அதில் 2 பிரகாரங்கள் நல்ல நிலையில் இருப்பதாக அறிக்கை தந்திருக்கிறார்கள். மீதமுள்ள ஒரு பிரகாரத்தை ரூ.3.20 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் பணி 50 சதவீத பணிகள் முடிவுற்றிருப்பதால், தற்போது அதை மாற்றி கருங்கல் அமைக்கின்ற பணிக்கு போனால் உபயதாரர் நிதி மூலம் செய்யப்படுகின்ற பணி என்பதால் அதற்கு ஆட்சேபனை வரும் என்ற காரணத்தினால் ஏற்கனவே முடிவு பெற்று இருக்கின்ற அந்த 2 சுற்று பிரகார தளம் பணிகளில் அவைகளை கருங்கல்லாக மாற்றுவதற்கு உண்டான கருத்துரு பெறப்பட்டு மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி தருவோம்.

சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜ் : சோழவள நாட்டில் பஞ்ச ஆரண்யங்கள் என்று 5 திருத்தலங்கள் இருக்கிறது. ஒரே நாளில் 5 திருத்தலங்களையும் தரிசனம் செய்யக்கூடிய வகையில் அதிகாலையில் இருந்து இரவு முதல் தரிசிக்க கூடிய ஒரே நேர் கோட்டில் 5 சிவ ஸ்தலங்கள் அமைந்திருக்கிறது. அதில் இரண்டாவது தலமான அவளிவநல்லூர் சட்டநாதர் திருக்கோவிலுக்கு குடமுழுக்கு செய்வதற்கு பணிகள் தொடங்கப்பட உள்ள சூழ்நிலை இருக்கின்றது. டெண்டர் விடப்பட்டிருக்கின்றது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. உடனடியாக அந்த பணிகளை தொடர்ந்து நடத்திட வேண்டுமெனவும், ஆலங்குடி பகுதியிலே அமைந்திருக்கின்ற ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அமைந்திருக்கின்ற அதே பகுதியில் அபய வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்திருக்கின்றது. இந்த பெருமாள் கோயிலுக்கு மொட்டை கோபுரம் தான் இருக்கின்றது. அதற்கு இராஜகோபுரம் அமைத்து தருவாரா என மாண்புமிகு அமைச்சர் அவர்களை கோருகிறேன்.

அமைச்சர் அவர்கள்: அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில் என்பது பஞ்சஆரண்ய ஸ்தலங்களில் வனம் சார்ந்த இரண்டாவது திருக்கோயில். அது அந்த வனம் சார்ந்த திருக்கோயிலில் முல்லை வனம் என்பது முதல் திருக்கோயில். பாதிரி வனம் என்பது உறுப்பினர் குறிப்பிட்ட சாட்சிநாதர் திருக்கோயில். அடுத்து வன்னி வனம், பூலை வனம், வில்வ வனம் என்று 5 திருக்கோயில்களை உள்ளடக்கியவை வனம்  சார்ந்த திருக்கோயில்கள் என்பதை தெரிவித்துக் கொள்வது மட்டுமல்லாமல் அவர் கோரிய குடமுழுக்கிற்குண்டான திருப்பணிகள் வருகின்ற 16.04.2023 அன்று பாலாலயம் செய்யப்பட இருக்கின்றது. சுமார் ரூ.34.30 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் பாலாலய நிகழ்வில் கலந்து கொண்டு இந்த திருக்கோவிலுக்கு உண்டான திருப்பணியை துவக்கி வைக்க வேண்டும் என்று பேரவை தலைவர் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் மொட்டை கோபுரம் இருப்பதாக தெரிவித்தார். 300 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் என்பதால் தொல்லியல் வல்லுநர் குழுவினரோடு ஆய்வு செய்து அந்த மொட்டை கோபுரத்தின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்து சாத்திய கூறுகள் இருப்பின் 3 நிலை ராஜகோபுரமாக கட்டித் தருவதற்கு இந்து சமய அறநிலையத்துறை முயற்சிக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உட்பட 7 நிலை ராஜகோபுரங்கள் இரண்டும், 5 நிலை ராஜகோபுரங்கள் இரண்டும், 3 நிலை ராஜகோபுரங்கள் இரண்டும் என்று 6 திருக்கோயில்களின் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கின்றது. கடந்தாண்டு மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்கள் கோரிய ஒரு ராஜகோபுரத்தையும் சேர்த்து 7 திருக்கோயில்களுக்கு ரூ.36 கோடி செலவில் ராஜகோபுரங்கள் அமைக்க 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜராஜ சோழன் காலத்தில் நடைபெற்ற திருப்பணிகளுக்கு இணையாக நம்முடைய நிகழ்கால ராஜராஜ சோழன் மாண்புமிகு தளபதி அவர்கள் ஆட்சியிலே நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார்: வந்தவாசி தொகுதிக்குட்பட்ட தெள்ளார் ஒன்றியத்திலுள்ள திருமால்பாடி கிராமத்தில் 1,136 ஆம் ஆண்டு ராஜராஜ சோழனின் வாரிசு பராந்தக சோழனின் மகன் விக்ரம சோழனால் கட்டப்பட்ட அரங்கநாயகி சமேத அரங்கநாத திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயில். இத்திருக்கோவிலில் நீண்ட காலத்திற்கு முன்பாக குடமுழுக்கு செய்யப்பட்டு பராமரிப்பின்றி காணப்படுகிறது. உடனடியாக இந்த திருக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்து தர வேண்டும் என்பதோடு, திருக்கோவிலுக்கு அருகில் 76.72 ஏக்கர் நிலப்பரப்பு கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளதால் அங்கு கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் தங்குவதற்கு தங்கும் விடுதி, சுற்றுவட்ட கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் அமைக்க அரசு முன் வருமா என கோருகிறேன்.

அமைச்சர் அவர்கள் : சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் அவர்கள் ஒரு கல்லிலே 2 மாங்காய் என்பது போல் ஒரே கேள்வியில் 3 கேள்விகளை தொடுத்து இருக்கின்றார். ராஜராஜ சோழனுக்குப் பிறகு பராந்தக சோழன் அவரது மகன் விக்ரமசோழன் என்று மன்னர்கள் மேற்கொண்ட திருக்கோயில் என்று குறிப்பிட்டார். மாண்புமிகு தமிழக முதல்வர் இதை கருத்தில் கொண்டு தான் ஆட்சி பொறுப்பேற்றவுடன் 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அந்த வகையில் 509 திருக்கோயில்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன கடந்த ஆண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 100 கோடி ரூபாய் அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டு 47 திருக்கோயில்கள் தற்போது குடமுழுக்கிற்கு திருப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உபயதாரர்கள் அதிகப்படியான திருப்பணிகளுக்கு தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து திருப்பணிகள் செய்வதற்கு ஆர்வமாக வந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால் அவர்களால் வழங்கப்படுகின்ற நிதி முழுமையாக அந்த திருப்பணிக்கு செலவிடப்படுவதே காரணமாகும். கடந்தாண்டு மட்டும் 66 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள உபயதாரர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்திருக்கிறது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 113 திருக்கோயில்கள் கடந்தாண்டு திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றது.  இந்தாண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் போதிய அளவு நிதி தருவார் என்ற நம்பிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை இருக்கின்றது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கோரிய இந்த திருக்கோயில் நிச்சயமாக 2023 - 2024 ஆம் ஆண்டில் திருப்பணி மேற்கொள்ளப்படும். கூடுதலாக திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி கோரியுள்ளார். முதலில் தெய்வத்திற்கு திருப்பணியும் குடமுழுக்கும் இறுதி செய்வோம். அதன் பிறகு பக்தர்கள் தங்கும் விடுதியும், திருமண மண்டபத்தையும் இந்து சமய அறநிலையத்துறை கருணையோடு பரிசீலிக்கும்.

Related Stories: