அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

போர்ட் பிளேர்: அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000ஐ கடந்தது. இதனைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ்,  இந்தோனேசியா, ஜப்பான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மிதமானதும் சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டு வருகின்றன.

இதனிடையே இந்தியாவிலும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், சிக்கிம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கங்கள் அண்மையில் ஏற்பட்டன. அந்த வகையில் அந்தமான் நிக்கோபார் தீவில் நேற்று திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது நேற்று இரவு 11:56 மணியளவில் அந்தமான் நிக்கோபர் தீவின் கிழக்கு வடகிழக்கில் போர்ட்பிளேர் பகுதியில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் 28 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அவர்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.  சிறிது நேரத்திற்கு பின் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Related Stories: