தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உரிமம் பெறாத கழிவுநீர் வாகனங்கள் இயக்க தடை: ஆணையர் உத்தரவு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல், உரிமம் பெறாமல் கழிவுநீர் உந்து வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் உந்து வாகனங்கள் இயங்க மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும்.

அவ்வாறு உரிமம் பெறாத வாகனங்கள் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்க அனுமதி இல்லை. தமிழ்நாடு நகர்ப்புறம் மற்றும் சென்னை பெருநகர் பகுதிகள் கசடு மேலாண்மை விதிகள் 2022 மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணையின்படியும், மாநகராட்சி உரிமம் பெற்ற கழிவுநீர் உந்து வாகனங்கள் மட்டுமே இயங்க அனுமதி வழங்க முடியும். இதுகுறித்த கழிவுநீர் உரிமையாளர்களுடனான விழிப்புணர்வு கூட்டம் 12.01.2023 மற்றும் 24.01.2023 ஆகிய 2 நாட்கள் நடத்தப்பட்டு, உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அரசாணையின்படி உரிமங்களை பெற அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க 21.03.2023 அன்று அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாநகராட்சி பகுதிகளில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமலும், உரிமம் பெறாமலும் சில கழிவுநீர் வாகனங்கள் இயங்கி வருகின்றன. அவ்வாறு உரிமம் பெறாமல் கழிவுநீர் உந்து வாகனங்கள் இயங்கி வந்தால், அந்த வாகனங்கள் மேற்கொண்டு இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: