கூர்நோக்கு இல்லங்களில் மதமாற்றம், போதைப்பொருள் குறித்து குற்றச்சாட்டுகள் வந்தால் நடவடிக்கை: தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் எச்சரிக்கை

சென்னை: தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் மற்றும் அவரது குழுவினர் நேற்று சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஆர்.ஜி.ஆனந்த் கூறியதாவது: சென்னை கெல்லீசில் உள்ள இல்லத்தில் ஆய்வு செய்ததில் சிறார்களுக்கு ஏற்ற சூழலில்  உள்ளது.  இங்கு உணவுகளும், சுகாதாரங்களும் சரியாக உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த இல்லத்தை சரியான முறையில் நடத்தி வருகிறது. புதுக்கோட்டையில் 246 சிறார்கள் இறந்ததற்கான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது, குழந்தைகள் போதை பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாக, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எங்கிருந்து போதை பொருள் கிடைக்கிறது, யாரிடமிருந்து கை மாற்றப்படுகிறது என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசினர் கூர்நோக்கு இல்லங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். தமிழக அரசின் ஒத்துழைப்பு தேசிய உரிமை ஆணையத்திற்கு சரியான முறையில் இருக்கிறது. கூர்நோக்கு இல்லங்களில் இதுவரையிலும் பார்த்த வரையில் பெரிதளவில் குறைகள் இல்லை, நிறைகள் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் காற்றோட்டம் உள்ள சூழலில்தான் இல்லங்கள் இருக்கிறது. சிறிய சிறிய குறைகள் மட்டுமே உள்ளது. அதுவும் இரண்டு நாட்களில் சரிசெய்ய கூடியதுதான்.

இந்தியா முழுவதிலும் மதமாற்றம் செய்யும் இல்லங்கள் இருக்கிறது அதுபோல தான் தமிழ்நாட்டிலும் மதமாற்றம் செய்யும் கூர்நோக்கு இல்லங்கள் இருக்கிறது. விரும்பி மதம் மாற்றம் செய்து கொள்ளலாம், கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது. 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை மதமாற்றம் செய்வது, போதை பொருட்கள் பயன்படுத்துவதை ஆணையம் வன்மையாக கண்டிக்கிறது. கூர்நோக்கு இல்லங்களில் உள்ள குறைகளை கண்டறிய நேரடியாக புகார்களை பெறுவதற்காக பத்து இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அப்சா, குழந்தைகள் நல குழும தலைவர் ராஜ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராஜ், குழந்தைகள் நல நிதி குழும உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: