×

அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வேலை, தொழில் வாய்ப்புக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம்

உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது சட்டப் பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழிப் படிப்பு மற்றும் தமிழ், ஆங்கிலப் பாடங்கள் முதல் இரண்டு பருவங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகள் மட்டும் அல்லாமல் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும்  இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் தயிர் என்பதை தஹி என்று அச்சிடச் சொன்னது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என்பது நமது கொள்கை. அதனால் மாநில கல்விக் கொள்கை வகுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிற மொழிகளை கற்பிக்கும் வகையில் அயலக மொழி கற்பிக்க 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும்  மாணவர்களுக்கு ஜெர்மன், பிரெஞ்சு, மற்றும் ஜப்பானிய மொழி  கற்றுத் தரப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2022-2023ம் ஆண்டில் 600 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
 பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.180 கோடி இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் போது அவர்களுக்கு சரி சமமாக ஊதியம் வழங்கும் வகையில் அதிகரிக்கப்பட்ட ஊதியம் விரைவில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் செயல்படும் உறுப்பு கல்லூரிகள் இந்த ஆண்டே அரசுக் கல்லூரிகளாக மாற்ற நடவடிக்ைக எடுக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான கலை அரங்கும் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதற்கான பணிகள் நடக்கிறது. 16 புதிய கல்லூரிகளுக்கு  கட்டிடம் கட்டும் பணி அனுமதிக்கப்பட்டு 10 கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதம் 6 கல்லூரிகளுக்கு கட்டப்படும். அனைத்து கல்லூரிகளிலும் கல்வி உள்ளிட்ட தரத்தை உயர்த்த அனைத்து ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. போட்டித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான போட்டித் தேர்வுக்கு தயார் செய்து  அதில் வெற்றிபெறச் செய்து உள் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கான  திறன் மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும். அதற்கான தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தேவைப்படும்  ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். பொறியியல் கல்லூரிகள் தொடர்பான பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொழிலிடை பட்டயப்படிப்பு அறிமுகம்: அமைச்சர் அறிவிப்பு
பேரவையில் உயர்கல்வி துறைக்கான மானியக் கோரிக்கையின் போது சட்டப் பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* அனைத்து உயிர்கல்வி நிறுவனங்களிலும் நிறுவன வளத் திட்டமிட்டலுடன்(Enterprise Resource Planning Software)  ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
* சென்னை, கோவை, கரூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொழிலகங்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய தொழிலிடைக் கல்வி பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.
* அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகளிலும் மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையங்கள், சிறு,குறு மற்றும்நடுத்தர தொழில்துறை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து  அமைக்கப்படும்.
* ஏழு அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 31 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1Gbps அளவிலான தொடர் இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.
* மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய திறன் பயிற்சி மையம் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும்.
* கோயம்புத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மின்சார வாகன இயக்க மையம் நிறுவப்படும்.
* ‘நான் முதல்வன் திட்டத்தின்’ கீழ் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
* அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதியதாக தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் ரூ.10 கோடியில் கொள்முதல் செய்யப்படும்.
* மூன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், கல்வி பயிலும் பொழுதே வருமானம் ஈட்டும் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படும்.
* 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முது கலை வணிக மேலாண்மை பட்டப்படிப்பும்(MBA),  ஐந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை கணினி பயன்பாட்டில்(MCA) பட்டப்படிப்பும் தொடங்கப்படும்.
* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 168 கல்லூரிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பில்  தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் எரிப்பான் இயந்திரம் வழங்கப்படும்.
* 2012-13ம் ஆண்டு மற்றும் 2022-23ம் ஆண்டு தொடங்கப்பட்ட 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் ரூ.68. 5 கோடி மதிப்பில் கட்டப்படும்.
* பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.180 கோடியில்  மேம்படுத்தப்படும்.
* அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில்(MIT) கூடுதல் உணவுக் கூடம் ரூ.5.87 கோடியில் கட்டப்படும்.
* அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் வளாகத்தில் உள்ள விடுதிகளில் இணைய வசதி ரூபாய் 1.08 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும்.
* அண்ணா பல்கலைக்கழக கோயம்புத்தூர் மண்டல வளாகத்தில் புதிய கல்விக் கட்டிடம் ரூ.15.51 கோடி மதிப்பில் கட்டப்படும்.
* மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.
* மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மனிதவள மேம்பாட்டு பயிற்சி அரங்கம் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
* சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் பெண்கள் விடுதி கட்டப்படும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

Tags : Minister ,Ponmudi , Minister Ponmudi announced a new curriculum according to job and career opportunities
× RELATED விழுப்புரம் விசிக வேட்பாளர்...