மெட்ரோ ரயில்களை சுத்தம் செய்வதற்காக தானியங்கி ரயில் கழுவும் ஆலை: மெட்ரோ நிறுவன இயக்குநர் திறந்து வைத்தார்

சென்னை: விம்கோ நகர் மெட்ரோ பணிமனையில் மெட்ரோ ரயில்களின் வெளிப்புறத்தை சுத்தம் செய்வதற்கான தானியங்கி ரயில் கழுவும் ஆலை மற்றும் மெட்ரோ ரயில் பராமரிப்புக்கான மொபைல் லிஃப்டிங் ஜாக்கை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன், கூடுதல் பொது மேலாளர் சதீஷ்பிரபு, உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். தானியங்கி ரயில் கழுவும் ஆலை விம்கோ நகர் பணிமனை மெட்ரோவில் உள்ள உயர்மட்ட பிரிவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த துப்புரவு அமைப்பு சோப்பு கரைசல், உயர் அழுத்த நீர் ஜெட் மற்றும் சுழலும் தூரிகைகளைப் பயன்படுத்துகிறது. 4 பெட்டிகளை கொண்ட ஒரு மெட்ரோ ரயிலை சுத்தம் செய்வதற்கு, 2000 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறது. அதில் 1600 லிட்டர் (80%) தண்ணீர் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மெட்ரோ ரயிலை சுத்தம் செய்வதற்கு தோராயமாக 10 நிமிடங்கள் ஆகும். விம்கோ நகர் பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி ரயில் சுத்தம் செய்யும் ஆலை டெல்லியின் ஸ்வஸ்திக் ஓவர்சீஸ் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது மற்றும் ஜெர்மனியின் வில்கோமாடிக் வாஷ் சிஸ்டத்தால் தயாரிக்கப்படுகிறது.

மொபைல் லிஃப்டிங் ஜாக் என்பது மெட்ரோ ரயில்களை தரைமட்டத்தில் இருந்து உயரத்தில் தூக்குவதற்கான இயந்திர நுட்பமாகும். மெட்ரோ ரயில்களை பராமரிப்பதற்கு இது ஒரு இன்றியமையாத உபகரணமாகும். விம்கோ நகர் மெட்ரோ பணிமனையில் நிறுவப்பட்டுள்ள மொபைல் லிஃப்டிங் ஜாக், ரயில் பெட்டிகளை அவிழ்க்க வேண்டிய அவசியமின்றி, ரயில்களை தூக்க முடியும்.. மெட்ரோ ரயிலை முழுவதுமாக உயர்த்தியவுடன், தனிப்பட்ட பெட்டிகள் அகற்றப்பட்டு, கீழே இறக்கிவிடலாம், வேறு எந்த கனரக தூக்கும் கருவியும் தேவையில்லாமல் அவற்றை மாற்ற முடியும். மொபைல் லிஃப்டிங் ஜாக்கில் அவசர நிறுத்தம், லிமிட் சுவிட்சுகள் மற்றும் அவசரகால அலாரம் போன்ற தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடனும் நிறுவப்பட்டுள்ளது. இது ரென்மாக் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் மூலம் நிறுவப்பட்டது.

Related Stories: