நெல்லையில் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் விசாரணைக்கு ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்.!

சென்னை: குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகளின் பற்களை போலீஸ் பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் விசாரணைக்கு ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சப்-டிவிஷனில் ஏ.எஸ்.பி-யாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரியான பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாகச் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வீடியோ வைரலானதால், சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்திவருகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறது. இந்த நிலையில், இந்த விவகாரத்தை வெளியில் கொண்டுவந்த நேதாஜி சுபாஷ் சேனைத் தலைவரும் வழக்கறிஞருமான மகாராஜன், பற்கள் பிடுங்கப்பட்டவர்கள் சார்பாக மனித உரிமைகள் ஆணையத்துக்கும் புகார் மனு அனுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் இன்று நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தைத் தெரிவிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி மனித உரிமைகள் ஆணையத்தில் மாரியப்பன், செல்லப்பா, இசக்கிமுத்து, சுபாஷ், வேதநாராயணன் ஆகியோர் இன்று காலை 11:30 மணிக்கு நேரில் ஆஜரானார்கள். வழக்கறிஞர் மகாராஜனுடன் ஐந்து பேரும் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி, தங்களிடம் ஏ.எஸ்.பி கடுமையாக நடந்துகொண்ட விவகாரம் குறித்து விளக்கமாகச் சாட்சியம் அளித்தனர். ஆணையத்தின் எஸ்.பி-யான மகேஷ்வரன் தலைமையிலான குழுவினர் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஏ.எஸ்.பி பல்வீர் சிங் தங்களைத் தாக்கியது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கின்றனர். அத்துடன், ஏ.எஸ்.பி-மீது புகாரளிக்காமல் இருக்குமாறு போலீஸார் மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் ஆணையத்தில் முறையிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஏ.எஸ்.பி பல்வீர் சிங்மீது புகாரளித்தவர்களிடம் மட்டுமல்லாமல் காவல்துறையினரையும் அழைத்து விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

Related Stories: