கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் ஜப்பான் ரோஜாக்கள்: சுற்றுலாப்பயணிகள் பிரமிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மரத்தில் பூத்து குலுங்கும் ஜப்பான் ரோஜாக்கள், சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கோடைக்காலம் துவங்கியதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பல்வேறு மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன. தற்போது கொடைக்கானலில் நிலவும் இதமான வெயில் மலர்ச்செடிகளுக்கு ஏதுவாக உள்ளது. இங்குள்ள பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக நடப்பட்ட செடிகள் அனைத்தும் ஏப்ரலில் பூக்கத் துவங்கி விடும்.

ஆனால் சற்று முன்னதாக தற்போது பூங்காவில் உள்ள மர வகை ஜப்பான் ரோஜாக்கள் கொத்துக் கொத்தாக பூக்கத் துவங்கியுள்ளன. ரோஜாக்களை செடிகளில் மட்டுமே பார்த்துள்ள சுற்றுலாப்பயணிகள், மரங்களில் ரோஜா பூத்துள்ளதை கண்டு, வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர். அதிசய பிரம்ம கமல பூக்கள்: இமயமலை போன்ற பனிப் பிரதேசங்களில் மட்டும் பூக்கக் கூடிய அதிசய பிரம்ம கமல பூக்கள் கொடைக்கானலில் தற்போது பூத்துள்ளது.

வெண்மை மற்றும் இளம் சிவப்பு நிறங்களில் உள்ள பிரம்ம கமல பூக்கள், இரவு நேரங்களில் மட்டுமே பூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொடைக்கானல் தந்தி மேடு பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் இந்த பிரம்ம கமல பூக்கள் பூத்துள்ளன. இந்த பூக்களை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

Related Stories: