வருசநாடு பகுதியில் பஞ்சத்தைப் போக்கிய பஞ்சம்தாங்கி கண்மாயில் தண்ணீருக்கு ‘பஞ்சம்’: கண்மாய், நீர்வரத்து ஓடைகளை தூர்வார கோரிக்கை

வருசநாடு: வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கண்மாய்கள் குளங்கள், நீர்வரத்து ஓடைகள் என அனைத்தையும் இந்த ஆண்டு பருவமழைகள் தொடங்குவதற்கு முன்பே ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை.

ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது. அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது.

தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியத்தில் 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளது. இப்பகுதியில் பெய்த கனமழையால் கண்டமனூர் புதுக்குளம் கண்மாய், பரமசிவன் கோவில் கண்மாய், மயிலாடும்பாறை அருகே அம்மாகுளம், கெங்கன்குளம், கோவில்பாறைகண்மாய், ஓட்டனைசிறுகுளம் கண்மாய், கோவிலாங்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் நிரம்பியது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னைக்கும், விவசாயத்திற்கு பாசனநீர் பற்றாக்குறை பிரச்னையும் தீர்ந்தது என விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால், வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டும், முறையாக தூர்வாரப்படாததால் நிரம்பாமல் உள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் தேவைக்கும் விவசாய விளை நிலங்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டபோது இந்த கண்மாயில் நீர் சேகரிக்கப்பட்டு அதை பயன்படுத்தி பஞ்சத்தைப் போக்கியதால் இதற்கு பஞ்சம்தாங்கி கண்மாய் என்ற பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெய்து வரும் ேகாடைமழையால் பஞ்சம்தாங்கி மலையிலிருந்து 5 சிற்றோடைகளில் இருந்தும் சுமார் 64.5 ஏக்கர் அளவுள்ள கண்மாயில் ஒரு சொட்டு நீர் கூட தேங்காமல் புதர்கள் மண்டி உள்ளது. இதேபோல், கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 543 ஏக்கர் பரப்பளவில் சாந்தநேரி, பெரியகுளம் உள்ளிட்ட 10 கண்மாய்கள் உள்ளது.

இதில் ஓட்டணை, பெரியகுளம், சிறுகுளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. பிற கண்மாய்களுக்கு மேகமலை அருவி, ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களில் பெரும்பாலானவை தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் காணப்பட்டது. குறிப்பாக பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பஞ்சம்தாங்கி, 81 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சாந்தநேரி, 109 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரியகுளம் உள்ளிட்ட கண்மாய்களில் பெரும் பாலான பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர்.

கண்மாய்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வருசநாடு பகுதி விவசாயிகள் ஒருங்கிணைந்து குழு அமைத்து அதன் மூலம் கண்மாய்களில் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் வாயிலாக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தனர். அதன்படி பெரியகுளம், சாந்தநேரி, பஞ்சம்தாங்கி ஆகிய கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். முதற்கட்டமாக கண்மாய் அளவீடு செய்யப்பட்டு கரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து பெரியகுளம், பஞ்சம்தாங்கி கண்மாய்களில் தனிநபர்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தென்னை மற்றும் இலவம் மரங்கள் அகற்றப்பட்டது. அதன் பின்பு கண்மாய் சீரமைப்பு பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. பணிகள் நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகளாகியுள்ள நிலையில் தற்போது வரை மீண்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் பஞ்சம்தாங்கி மற்றும் பெரியகுளம் கண்மாய்களில் பொதுமக்கள் குப்பை ெகாட்டும் இடமாக மாற்றி வருகின்றனர்.

மேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தனி நபர்கள் மீண்டும் கண்மாயை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். இதுஒருபுறம் இருக்க, கண்மாய்களுக்கான வரத்து வாய்க்கால்கள் செடிகள், கொடிகள் படர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் மூல வைகை ஆறு மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டாலும் கண் மாய்களுக்கு தண்ணீர் முழுமையாக போய் சேருவதில்லை. இந்த நிலை நீடித்தால் கடமலை- மயிலை ஒன்றியத் தில் உள்ள அனைத்து கண்மாய்களும் தனிநபர்களின் வசம் போகும் நிலை உள்ளது.

எனவே அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் அனைத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில் ‘‘தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான குளம், ஏரி, கண்மாய்கள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் தேங்கும் பாசனநீரை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் உள்ளன. இந்த கண்மாய்கள் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்மாய்களை மீட்க வேண்டும் என விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் வலியுறுத்தினர். அதேபோல பல கண்மாய்களில் முறையான குடிமராமத்து பணிகளும் நடக்கவில்லை என புகார்கள் எழுந்தன. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிலேயே, பொதுப்பணிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு கண்மாய்கள் மீட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விதிமுறைகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கண்மாய்களை மீட்க தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு ெகாண்டிருக்கிறது. ஒவ்வொரு திட்டத்திலும், செயல்பாடுகளிலும், அதிரடி நடவடிக்கைகளிலும், இது அனைத்து தரப்பு மக்களுக்கான அரசு என்பதை மீண்டும் அழுத்தமாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. எனவே, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ’’ என்றனர்.

Related Stories: