×

இலங்கை கடற்படை சிறை பிடித்த நாகை, புதுகை மீனவர்கள் 16 பேர் சென்னை திரும்பினர்: முதல்வர் ஸ்டாலின் முயற்சியால் விடுவிப்பு

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கடந்த 12ம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் 16 பேரையும் கைது செய்து, அவர்களின் 2  படகுகள், மீன்பிடி வலைகள் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். பிறகு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர், பிரதமர் மற்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதினார்.

இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசிடம் பேசினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம், முதலில் 12 நாகை  மீனவர்களையும் அடுத்த சில தினங்களில் 4 புதுக்கோட்டை மீனவர்களையும் விடுதலை செய்து, அவர்களை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பராமரிப்பில், ஒப்படைக்கப்பட்டனர். இதற்கிடையே இந்திய தூதரக அதிகாரிகள், தமிழ்நாடு மீனவர்கள் 16 பேருக்கும், எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கி, அவர்கள் அனைவருக்கும் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடுகளையும் செய்தனர். அதன் பேரில் 16 தமிழக மீனவர்களும் நேற்று பிற்பகல் 1.50 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் புறப்பட்டு, மாலை 3.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்றனர். அதன்பின்பு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் மீனவர்கள் ஏற்றப்பட்டு, சொந்த ஊரான நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.




Tags : Sri Lankan Navy ,Nagai ,Chennai ,Chief Minister ,Stalin , 16 Nagai and Pudukai fishermen captured by the Sri Lankan Navy returned to Chennai: Chief Minister Stalin's efforts enabled release
× RELATED நாகை மீனவர்களுக்கு 3வது முறையாக காவல் நீட்டிப்பு..!!