புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திடீர் ஆய்வு செய்தார். அங்கு அவர் 1 மணி நேரத்திற்கும் மேல் இருந்தார். நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கடந்த 2020 டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த பணி ரூ.1000 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.  பிரதமர், அமைச்சர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு என தனித்தனி வசதிகளுடன் இந்த கட்டிடம் தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி முடிந்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் முடியவில்லை. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் கட்ட கூட்டம் அங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் நடக்கும் பகுதிக்கு வந்தார். அவருடன் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவும் வந்தார். அங்கு நடக்கும் பல்வேறு கட்டுமான பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.  மேலும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடமும் பிரதமர் மோடி பேசி கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.  சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் அங்கு இருந்த மோடி நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள மக்களவை, மாநிலங்களவை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.

Related Stories: