சாய்பல்லவி க்யூட்டி ப்யூட்டி டிப்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

மலர் டீச்சராக பிரேமம் படத்தில் அறிமுகமானது முதல் தென்னிந்திய சினிமாவில் டான்ஸிங் ப்ரின்சஸாக டாலடித்துக்கொண்டிருப்பவர் சாய்பல்லவி. ரவுடி பேபி பாடலில் குத்தாட்டம் போட்டவர் விராட பர்வம், கார்க்கி என ரவுண்டு கட்டிக் கலக்கிக்கொண்டிருக்கிறார். அடிப்படையில் மருத்துவரான சாய்பல்லவியின் ஃபிட்னெஸ் சீக்ரெட் என்னவென்று கேட்டோம்.

இயல்பிலேயே ஒல்லிபெல்லிதான் என்றாலும் உணவின் மீது சாய்பல்லவிக்கு நல்ல கட்டுப்பாடு உண்டு. எளிமையான வீகன் டயட் எனப்படும் நனி சைவம்தான் என்றும் இவரின் ஃபேவரைட். தன்னை எப்போதும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க இந்த வீகன் டயட்தான் உதவுகிறது என்கிறார். வீகன் என்பது பால், முட்டை உள்ளிட்ட எந்தவித அசைவப் புரதங்களையும் கொழுப்புச் சத்துக்களையும் எடுத்துக்கொள்ளாத நனி சைவ உணவு முறை.

”என் உடல் நலத்தையும் அழகையும்  பராமரிக்க நான் வீகன் டயட் தான் மேற்கொள்கிறேன். ஆனால், இந்த டயட் நானே வடிவமைத்தது. நிறைய பச்சைக் காய்கறிகளையும் பால்  மற்றும் பழங்களையும் எடுத்துக்கொள்கிறேன். காலையில் வழக்கம்போல இட்லி அல்லது தோசையுடன் எதாவது ஒரு சூப் எடுத்துக்கொள்வேன். மதியம் நிறைய காய்கறிகளைச் சேர்த்த சப்ஜியோ கூட்டோ  எனக்கு தவறாமல் இருக்க வேண்டும். காலை மற்றும் மதிய உணவுக்கு இடையிலான இடைவேளைகளில் பசிக்கும்போது பழங்கள் சாப்பிடுகிறேன்.

இரவு ஏதேனும் லைட்டான வீகன் உணவுதான் என் சாய்ஸ். அப்போதுதான் நன்றாக உறங்க முடியும். அளவுக்கு அதிகமாக மதியம் உண்ணும்போது செரிமானமாகாமல் உறக்கம் பாதிக்கப்படக்கூடும். நான் என்ன சாப்பிடுகிறேன் என்பதைப் போலவே என்ன சாப்பிடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருப்பேன். பெரும்பாலும் எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைத் தொடவே மாட்டேன்.

இவற்றில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் என் உடல் ஆரோக்கியத்தை மட்டுமே எண்ணெய்ப் பசை நிறைந்த என் முகத்தையும் சருமத்தையும்கூட பாதிக்கக்கூடியது என்பதால், நொறுக்ஸ் மற்றும் எண்ணெய்ப் பலகாரங்களுக்கு எப்போதுமே தடாதான்.

உணவைப் போலவே உடற்பயிற்சி முக்கியமானது. நான் ஜிம்முக்குப் போய் மாங்கு மாங்கென வொர்க் அவுட் எல்லாம் செய்யமாட்டேன். தினசரி கார்டியோ வொர்க் அவுட் செய்வேன்தான். ட்ரெட் மில்லில் நடப்பது, வாக்கிங் போவது எனக்குப் பிடித்த கார்டியோ அதைத் தவிர எளிய உடற்பயிற்சிகள் செய்வேன்தான். ஆனால், என்னை ஜிம் பேபி என்று சொல்ல முடியாது.

எனக்கு உடற்பயிற்சியாகவும் உள்ளத்தை வளமாக்கும் சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டராகவும் இருப்பது என் பிரிய நடனம்தான். நடனம் போல் என்னை எனக்கே பரிசளிக்கும் அற்புதம் வேறு ஒன்றில்லை என்றே சொல்வேன். ஆமாம். நடனத்தை நீங்கள் விரும்பிச் செய்யும்போது அது உங்களை புதிதாக்கி தருகிறதென்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அழகுப் பராமரிப்புக்கு என்று நான் அதிகம் மெனக்கெடுவதில்லை. இயற்கையான தேங்காய் எண்ணெய்தான் என் கூந்தலுக்குப் பயன்படுத்துகிறேன். குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்று முறையாவது தேங்காய் எண்ணெய் வைக்கத் தவற மாட்டேன். இதனால், தலைமுடி இயற்கையாகவும் போஷாக்காகவும் இருக்கிறது.

என் முகம் இயல்பாகவே கொஞ்ச எண்ணெய் பசை நிறைந்த சருமம் என்பதால் அதனை நன்கு பராமரிப்பேன். க்ளென்சிங், மாய்ஸ்சுரைசிங், டோனிங் என எல்லாவற்றுக்கும் இயற்கையான வழிமுறைகளையே பின்பற்றுவேன். லைம் லைட் எப்போதும் விழுந்துகொண்டே இருக்கும் சருமம் என்பதால் அதனைப் பராமரிக்க வேண்டியது அவசியம். அதற்காக வேதிப் பொருட்களை எப்போதும் தேட மாட்டேன். ஆர்கானிக் முறையில் என்னென்ன வகைகளில் என் சருமத்தைப் பாதுகாக்க இயலுமோ அவற்றை மட்டுமே மேற்கொள்கிறேன்.

உணவு, உடற்பயிற்சி, ஓய்வு இந்த மூன்றும் சமவிகிதத்தில் இருந்தாலே உடலும் மனமும் ஃபிட்டாகவும் க்யூட்டாகவும் இருக்கும். எவ்வளவு பிஸியான வேலை என்றாலும் நான் இந்த மூன்றுக்கான முக்கியத்துவத்தை விட்டுக்கொடுத்ததே இல்லை. அதனால்தான் இயற்கையான அழகோடும் வனப்போடும் இருக்க முடிகிறது’ என்று அழகாகச் சிரிக்கிறார்’ க்யூட் கார்க்கி.

தொகுப்பு:  மோனிகா ரவீந்திரன்

Related Stories: