
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஏப்.2 முதல் ஊதியம் ரூ.294 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2011ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பெயர் மாற்றியது நீங்கள் தான், நாங்கள் பெயரை மாற்றவில்லை. தாய் திட்டம் என்று பெயர் மாற்றினீர்கள். அண்ணாவின் பெயரால் கட்சி வைத்திருப்பவர்கள் அண்ணாவை மறந்துவிட்டு, பெயர் மாற்றம் செய்தவர்கள் நீங்கள்தான். இன்றைக்கு கலைஞரை மறக்காமல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை திரும்பவும் கொண்டு வந்துவிட்டார்கள்.
இன்றைக்கு 5,483 குழந்தைகள் நேய பள்ளிக்கு ரூ.823 கோடி ரூபாய் முதல்வர் ஒதுக்கியிருக்கிறார். 88 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் நிலுவையில் இருந்தன. அவற்றிற்கும் ரூ.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, இந்த ஆண்டு, அவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வேலை திறன் நாட்கள் வரும் ஆண்டில் ரூ.35 கோடி என்பது ஒரு மதிப்பீடாகத் தான் நாங்கள் சொல்லியிருக்கிறோம். இந்தத் திட்டத்தின் மூலமாக சில பணிகளை நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம். குறிப்பாக இன்றைக்கு சம்பளத்தை பற்றிச் சொன்னீர்கள். சம்பளம் வரும் ஏப்ரல் 2ம் தேதி 294 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.
150 நாட்களை கொடுத்துவிடலாம். நீங்கள் தான் ஒன்றிய அரசோடு உறவாக இருக்கிறீர்கள். வாங்கி கொடுங்கள். 150 நாட்கள் என்ன, 200 நாட்கள் கூட கொடுக்கலாம். நிதியை வாங்கிக் கொடுங்கள். ஏற்கெனவே நான் சொல்லிவிட்டேன். விடியல் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு விடியலுக்கு வழிக்காட்ட போகின்றவர் தான் முதல்வர். அந்த அடிப்படையிலே இந்தத் திட்டம் நிச்சயமாக, சிறப்பாக மேம்படுத்தப்படும். அதற்கு நாங்கள் உறுதியாக, இந்தத் திட்டத்தில், வருகிற ஆண்டில் வேலைத் திறன் நாட்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம்.
மொத்தம் 93 லட்சம் பேர் இருக்கிறார்கள். எந்தக் கிராமமாக இருந்தாலும், கிராமத்திற்கு அருகாமையில் நடந்து தான் 100 நாட்கள் வேலைத் திட்டத்திற்கு செல்ல வேண்டும். 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லாம் போக வேண்டாம். 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் தான் இருக்க வேண்டும். கடந்த காலத்தில். நெடுஞ்சாலைத் துறையாக இருந்தாலும் சரி அல்லது ஊரக வளர்ச்சித் துறையாக இருந்தாலும் சரி, நிதி ஒதுக்கீடு என்பது பாரபட்சமாக இருந்தது. எல்லோருக்கும் போகாது, சமச்சீராக இருக்காது. ஆனால், சமச்சீர் தான் திராவிட மாடல் ஆட்சி. ஒதுக்கியிருக்கின்ற 4,000 கோடி ரூபாய் நிதி, தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 தொகுதிகளுக்கும் சமச்சீராக செல்கிறது. எந்தத் தொகுதியும் விடுபடவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.