சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திருப்பூர் தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் பேசுகையில், பருத்தியை கொள்முதல் செய்து, நூற்பாலைகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய தனி ஆணையம் அமைக்க வேண்டும். நெருக்கடியான சூழ்நிலைகளையெல்லாம் உணர்ந்து, எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய ஓர் ஆணையமாக இந்த ஆணையம் அமைக்க வேண்டும்’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், ‘தமிழ்நாடு பருத்தி கழகம் என்ற நிறுவனம் அமைக்கவும், நூற்பாலைகளுக்குத் தேவையான பருத்தியை கொள்முதல் செய்து நேரடியாக விற்பனை செய்வதற்கும், உரிய நேரத்தில் தனி ஆணையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். தமிழ்நாட்டில் பஞ்சு பேல்களை தங்கு தடையின்றி விநியோகம் செய்வதற்கு தனியார் நூற்பாலை பிரதிநிதிகளும், சைமா என்ற கூட்டமைப்பும், கூட்டுறவு நூற்பாலை பிரதிநிதிகளும் சேர்ந்து பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் மாடலில் தமிழ்நாடு பருத்திக் கழகம் என்ற பெயரில் ஆரம்பித்தோம் என்றால் நிச்சயமாக அது நல்லதாக இருக்கும். அதை முதல்வருடன் ஆலோசித்து நிச்சயமாக அதைச் செய்வோம்’ என்றார்.
