×

ஆரணி பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக குழு கலைப்பு: அதிமுக ஆட்சியில் முறைகேடு நடந்தது உறுதியானது

திருவண்ணாமலை: அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடாக நிலம் ஒதுக்கப்பட்டது உறுதியானதை அடுத்து ஆரணி பட்டு கூட்டுறவு சங்க நிர்வாக குழு கலைக்கப்பட்டு அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கொசப்பாளையம் பகுதியில் ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் இயங்கி வருகின்றது. இதில் 3,500-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் நிர்வாக குழுவின் தலைவராக அதிமுக ஒன்றிய அவை தலைவர் சேவூர் சம்பத், துணை தலைவராக சுந்தரமூர்த்தி ஆகியோர் இருந்தனர். மொத்தம் 7 பேர் உள்ள அந்த குழு நிர்வாகிகள் கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டன.

2000-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இரும்பேடு பகுதியில் நெசவாளர்களுக்கு 53 இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. மேலும் பூங்கா, நியாயவிலை கடை அமைக்கவும் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்தை சங்க உறுப்பினர் ஒருவருக்கும், சங்கத்தில் இல்லாத 2 பேருக்கும் ஒதுக்கி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. விசாரணையில் இது உறுதியான நிலையில் பட்டு கூட்டுறவு சங்க இணை இயக்குனர் உத்தரவின் படி நிர்வாக குழு கலைக்கப்பட்டது. மேலும், நிர்வாகத்தை அரசே கைப்பற்றியுள்ளது. 


Tags : Arani Pattu Cooperative Society Management Committee ,AIADMK , Arani Pattu, Cooperative, Society Management Committee, Dissolution
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி