×

மேலூர் அருகே நெடுஞ்சாலையோரம் எரிக்கப்படும் குப்பைகள்: புகையால் பாதிக்கப்படும் பொதுமக்கள்

மேலூர்: மேலூர் அருகே ஊராட்சி நிர்வாகமே, கிராமங்களில் சேரும் குப்பைகளை நெடுஞ்சாலை ஓரமாக கொட்டி தீ வைத்து எரிப்பது, சுற்றுச்சூழலை கடுமையாக பாதித்து வருகிறது. மேலூர் அருகில் உள்ளது கீழையூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சேகரிக்கப்டும் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேமிக்க, சில மாதங்களுக்கு முன்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், ஒரு சில நாட்கள் மட்டும் முறைப்படி குப்பை பிரிக்கும் இடங்களுக்கு சென்று குப்பைகளை கொட்டிய ஊராட்சி நிர்வாகம், கடந்த சில மாதங்களாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களில், குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனர்.

இதன்படி, அட்டப்பட்டி ரோடு, தனியாமங்கலம் சாலைகளில் வழக்கமாக குப்பைகளை கொட்டி எரிந்து வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக, மேலூர் - காரைக்குடி நெஞ்சாலையில், தற்போது தனியார் திருமண மண்டபத்தை ஒட்டியுள்ள சாலையோரங்களிலேயே தற்போது குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனர். அவ்விடத்தில் குப்பைகளை சேகரிக்கும் தொட்டியும் உள்ளது. அதிலும் குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் சாலை முழுவதும் புகை பரவி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகும் நிலையை உருவாக்கி வருகின்றனர்.

ஊராட்சி நிர்வாகமே இப்படி குப்பையை கொட்டி எரிப்பதை பார்த்த திருமண மண்டப நிர்வாகத்தினர், அங்கு சேரும் எச்சில் இலை உள்ளிட்ட குப்பைகளை, இதே இடத்தில் கொண்டு வந்து கொட்டி எரிக்கின்றனர். இத்துடன் குப்பைகளை எரிக்கும் இந்த இடத்திற்கு அருகில் அரசு பள்ளி ஒன்றும், முஸ்லிம்களின் இடுகாடும் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு மாறாக சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகமே சாலையோரங்களில் தீவைத்து எரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே இந்த பிரச்னையினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Melur , Garbage burning on highway near Melur: Public affected by smoke
× RELATED தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி