×

ஊழல் குற்றச்சாட்டுகளால் பாஜவுக்கு பின்னடைவு கர்நாடக தேர்தலில் காங்கிரசின் கை ஓங்குமா

கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுக்கு பலமான கட்சி என்ற பெருமை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு போட்டியாக பாஜ தலைவர் எடியூரப்பா பாஜ கட்சியை மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்த பெருமையை பெற்றார். அதனால் காங்கிரஸ்-பாஜ இரண்டு தேசிய கட்சிகளுமே கர்நாடகாவின் பிரதான கட்சிகளாக பார்க்கப்படுகிறது. அதே போல் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் முக்கிய இடம் பிடித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. கடந்த 2018ல்  நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 70.06 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில் பாஜ 104, காங்கிரஸ் 78, மதசார்பற்ற ஜனதாதளம் 36, பகுஜன் சமாஜ் கட்சி 1, சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி ராம்நகரம் மற்றும் சென்னபட்டனா ஆகிய இரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது முதல்வராக இருந்த சித்தராமையா, மைசூரு மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு பாதாமியில் வெற்றி பெற்றார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்பட்ட நிலையில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜ தனிப்பெரும் கட்சியாக இருந்ததால், ஆட்சி அமைக்க வரும்படி அப்போது ஆளுநராக இருந்த வஜுபாய் ரூடாபாய் வாலா அழைப்பு விடுத்தார். அதையேற்று பாஜ சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.எஸ்.எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். ஆனால் பேரவையில் போதிய உறுப்பினர் பலம் இல்லாத காரணத்தால் இரண்டே நாளில் 2018ம் ஆண்டு மே 19ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். மஜத-காங்கிரஸ் கூட்டணி: அதை தொடர்ந்து மாநில அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்வராக எச்.டி.குமாரசாமி பொறுப்பேற்றார். துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் பரமேஷ்வர் பதவியேற்றார்.  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 பேரும் மஜதவை சேர்ந்த 10 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ஓராண்டில்  கவிழ்ந்தது:

மிகவும் எதிர்பார்ப்புடன் அமைந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, நினைத்தபடி முழுமையாக நடக்காமல் கடந்த 2019 ஜூலை 26ம் தேதி காங்கிரசை சேர்ந்த  12 எம்எல்ஏக்கள், மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், ஒரு சுயேட்சை பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பேரவையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதன் பிறகு புதிய முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார். இரண்டாண்டு பதவி வகித்த எடியூரப்பாவை வயதை காரணம் காட்டி கட்சி மேலிடம் பதவி விலக வலியுறுத்தியது. இதை ஏற்றுக்கொண்ட எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகனான பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்றார். கடந்த 3 ஆண்டு காலத்தில் பாஜ ஆட்சி மீது அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் எழுந்தது. மேலும் எந்த ஒரு அரசு பணி மேற்கொள்ளவும்  அமைச்சர்கள், பாஜ நிர்வாகிகள், அதிகாரிகள் 40 சதவீதம் லஞ்சம் கேட்பதாக  ஒப்பந்ததாரர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.  இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது.

லஞ்ச ஊழல் புகாரில் சமீபத்தில் பாஜ எம்எல்ஏ மாடால் விபாட்சப்பா அவரது மகன் செய்து செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி இஸ்லாமிய மாணவிகள் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்தால் மதக்கலவரங்கள் வெடித்தன. இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து பாஜ அரசு அறிவித்ததாலும், எஸ்சி வகுப்பினரான பஞ்சாரா சமூகத்தினரை அப்பட்டியலில் இருந்து நீக்கியதாகவும் தகவல்கள் வெளியானதால் பாஜ அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதனால் பாஜ அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். போலீஸ் பணிக்காக தேர்வில் ஊழல் நடந்ததாக பல அதிகாரிகள் கைதாகினர். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பாஜ அமைச்சர் பதவி விலக நேரிட்டது. இப்படி பாஜ அரசின் மீதான அடுக்கான ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளால் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதே நேரம் பாஜ அரசின் ஊழல் முகத்திரையை கிழித்து மக்களிடையே காங்கிரஸ் தனது செல்வாக்கை பல மடங்கு உயர்த்திக்கொண்டுள்ளதால் காங்கிரசின் கை வரும் தேர்தலில் ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* பசுமை தேர்தல் கர்நாடக பேரவை தேர்தலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடத்த வேண்டும் என்பது ஆணையத்தின் நோக்கமாக உள்ளது. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், வாக்குசேகரிப்பு சமயத்தில் அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் கொடிகள், தோரணங்கள், பேனர்கள் பயன்படுத்தாமல், எளிதில் மங்கும் வகையில் காகிதம் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கிறது.

* மொத்த வாக்காளர்கள் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் வரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ள வாக்காளர்கள் அடிப்படையில் 2 கோடியே 62 லட்சத்து 42 ஆயிரத்து 561 ஆண், 2 கோடியே 59 லட்சத்து 26 ஆயிரத்து 319 பெண் மற்றும் மூன்றாவது பாலினத்தை சேர்ந்த 4 ஆயிரத்து 699 வாக்காளர்கள் என மொத்தம் 5 கோடியே 21 லட்சத்து 73 ஆயிரத்து 579 வாக்காளர்கள் உள்ளனர்.



Tags : BJP ,Congress ,Karnataka , Backlash to BJP due to corruption allegations, Congress's hand in Karnataka elections
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...