வெறுப்பு பேச்சு முடிவுக்கு வர அரசியலில் மதத்தை பயன்படுத்த கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி:  அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதை அரசியல்வாதிகள் நிறுத்தும் தருணத்தில், வெறுப்புப் பேச்சுகள் முடிவுக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் நடந்த 50 பொதுக்கூட்டங்களில் வெறுப்பு பேச்சு பேசப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் டெல்லி, உபி, உத்தரகாண்ட் மாநிலங்களில் வெறுப்பு பேச்சு குறித்தும் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகள் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

வெறுப்புப் பேச்சுகள் பேசாமல் ஒவ்வொருவரும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் அரசியலை மதத்துடன் கலக்கும் போது பெரிய பிரச்னை எழுகிறது. அரசியலையும் மதத்தையும் பிரிக்கும் தருணத்தில் இது முடிவுக்கு வரும். அரசியல்வாதிகள் மதத்தை பயன்படுத்துவதை நிறுத்தினால் இதெல்லாம் நின்றுவிடும். மதத்துடன் அரசியலை கலப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்று சமீபத்தில் தீர்ப்பில் கூறியுள்ளோம். டிவி மற்றும் பொது இடங்களில் கூட வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து விட்டன.  நாம் எங்கு செல்கிறோம் என்று பார்க்க வேண்டும்?   பேச்சுக்களில் கொஞ்சம் கட்டுப்பாடு இருக்க வேண்டாமா? இல்லையெனில் நாம் விரும்பும் இந்தியாவாக உருவாக்க முடியாது. இந்த பேச்சுகளால் நாம் என்ன வகையான இன்பங்களை பெறுகிறோம்.

இருப்பினும் தொடர்ந்து மற்றவர்களை இழிவுபடுத்தும் வகையில் பாகிஸ்தானுக்கு போ என்று பேசி வருகின்றனர். ஆனால் பிற சமூகத்தினரும் இந்த நாட்டை தேர்வு செய்துள்ளனர். உங்கள் சகோதர சகோதரிகள் போன்றவர்கள். அவர்களை அவமதித்து நாட்டின் சட்டத்தை மீற உங்களுக்கு உரிமை இருக்கிறதா? நாட்டின் சட்டத்தை மீறினால், அது செங்கற்கள் போல உங்கள் தலையில் விழும். உண்மையான வளர்ச்சி என்பது நமது நாட்டை வல்லரசாக மாற்ற வேண்டும். அதற்கு நாம்  சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டை சிறந்த வாழும் இடமாக மாற்ற முடியும்.இவ்வாறு கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: