×

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்: வன பாதுகாப்பு திருத்த மசோதா தாக்கல்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே மக்களவையில் நிறுவனங்கள் போட்டி சட்ட திருத்த மசோதா எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. மேலும் வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. ராகுல் தகுதி நீக்கம் விவகாரம் மற்றும் அதானி குழும மோசடி தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியதும், இந்த விவகாரங்களை எழுப்பி, கருப்பு உடையில் வந்திருந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்தனர்.

இதனால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் கூடிய போது, அமளிக்கு நடுவே, இந்திய நிறுவனங்கள் போட்டி சட்ட திருத்த மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விவாதத்திற்கு முன்வைத்தார். ஆனால் தொடர் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் எந்த விவாதமும் இல்லாமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா 7 மாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், போட்டி சட்டத்தை மீறும் நிறுவனங்களின் சந்தை வருவாயை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், அவற்றின் உலகளாவிய வருவாயின் அடிப்படையில் அபராதம் விதிக்க இந்திய போட்டி ஆணையத்திற்கு (சிசிஐ) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதே போல, சர்ச்சைக்குரிய வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தாக்கல் செய்தார். பின்னர் இந்த மசோதா இரு அவைகளின் கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இந்த குழுவில் 19 மக்களவை எம்பிக்கள், 10 மாநிலங்களவை எம்பிக்கள் மற்றும் மக்களவை சபாநாயகரால் பரிந்துரைக்கப்படும் 2 எம்பிக்கள் இடம் பெற்றிருப்பர். பின்னர் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதே போல மாநிலங்களவையிலும் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. எதிர்க்கட்சிகள் அமளிக்கு நடுவே, வனபாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவின் கூட்டுக்குழுவில் இடம் பெறும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியலை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கொண்டு வந்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவில் கொண்டு வரப்படும் திருத்தத்தின்படி தேச முக்கியத்துவம் வாய்ந்த, நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால், சர்ச்சைக்குரிய பல திட்டங்கள் தேச முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களாக குறிப்பிடப்பட்டு, அவை நிறைவேற்றப்படுவதால் காடுகள் அழிக்கப்படும் என பல்வேறு கட்சி தலைவர்கள், தனியார் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

* நாடாளுமன்ற அலுவலகத்திற்கு வந்த ராகுல் மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட சில உறுப்பினர்களை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், தனது தாயாரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவருமான சோனியா காந்தியுடன் மதிய உணவிற்குச் சென்றார். ராகுல் ஊடகங்களுக்கு எந்த பேட்டியும் தரவில்லை.




Tags : Bill ,Lok ,Sabha , Bill passed in Lok Sabha amid protests from opposition parties: Forest Protection Amendment Bill tabled
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல்...