×

குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு  பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், புகார் அளித்து 90 நாட்கள் கடந்த நிலையிலும் வழக்கு தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை எனவும், வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும் கூறி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.

மனுவில், புதுக்கோட்டை சிபிசிஐடி போலீசார் பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்தி வருகிறார்கள். உண்மை குற்றவாளிகளை  சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி புலன் விசாரணை அதிகாரியின் அறிக்கையை தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில், வழக்கின் புலன் விசாரணை நியாயமாக நடந்து வருவதாகவும், உயரதிகாரிகள் விசாரணையை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, நீதிபதிகள், சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிடப்படுகிறது. சம்பவம் குறித்து விசாரித்து இரு மாதங்களில் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஒருநபர் ஆணையத்துக்கு தேவையான வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Justice ,M. Sathyanarayanan ,Madras High Court , A one-man commission headed by retired Justice M. Sathyanarayanan to investigate the issue of human waste in the drinking tank: Madras High Court orders
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்