×

விழுப்புரம் ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் மனு விரிவான பதில் அளிக்குமாறு போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் கோரிய மனு குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 7 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 18 ஆண்டுகளாக ஆசிரமம் நடத்தி வரும் தங்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும் தற்போது காவல்துறையினர் வேண்டும் என்றே தவறாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறினார். இதனையடுத்து, கைது செய்யப்பட்டுள்ள ஒவ்வொருவர் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பது குறித்தும், அவர்களுக்கு எதிராக திரட்டப்பட்ட ஆதாரங்கள் தொடர்பாகவும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Villupuram ,ashram , Court directs police to file detailed reply to Villupuram ashram administrators' bail petition
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...