×

தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் விபத்து: மரண உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு

பேரவையில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துறை அமைச்சர் சி.வி.கணேசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அது வருமாறு:

* அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மூக்கு கண்ணாடி உதவித்தொகை ரூ.500ல் இருந்து ரூ.750ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள், தகுதியின் அடிப்படையில் ஐஐடி, ஐஐஎம் மற்றும் எம்பிபிஎஸ் சேர்ந்தால் கல்வி கட்டணம், தங்கு விடுதிக்கான முழு கட்டணம், வாழ்க்கை செலவுக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

* பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் விபத்து மரண உதவித்தொகை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். புலம் பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நிதியுதவி
வழங்கப்படும்.

* தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

* தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்கள் பணியின்போது விபத்து மரணம் அடைந்தால் ரூ.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

* ஆண்டொன்றுக்கு 1000 பேருக்கு தச்சர், கொத்தனார், கம்பி வளைப்பவர், பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட திறன் பயிற்சி வழங்க ரூ.4.74 ேகாடி அளிக்கப்படும்.

* 27 அரசு தொழிற்பயற்சி நிலையங்களில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.18.70 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.

* அயனாவரம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் மயக்கமருந்தியல், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவம் ஆகிய பிரிவுகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு பிறகான 2 ஆண்டு பட்டயப்படிப்புகள் ரூ.1.23 கோடி செலவில் துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Firecracker, matchbox workers registered with Workers' Welfare Board Accident: Death benefit hiked to Rs 2 lakh
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்