நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாதத்தை தொடங்கி வைத்து திருமங்கலம் ஆர்.பி.உதயகுமார் (அதிமுக) பேசியதாவது: நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற அறிவிப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளது. ஆனால், செயல்பாட்டுக்கு எப்போது வரும்? குடிமராமத்து திட்டம் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, 2017ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி தொடங்கப்பட்டது. 30 மாவட்டங்களில் 4,821 பணிகள் எடுத்துக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திட்டத்தை தொடர்வது பற்றி கொள்கை விளக்க குறிப்பில் எதுவும் இல்லை.
ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விளை நிலங்களுக்கு உரமாக விவசாயிகளே எடுத்துக்கொள்வார்கள் என்று கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது வண்டல் மண்ணை எடுக்க அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டம் வரலாற்று சிறப்புமிக்க திட்டமாகும். ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நீர்வளத்துறை தொடர்பாக 31 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் வந்து பணி செய்கிறார்கள்.
இதுதொடர்பான பிரச்னை பற்றி செய்திகள் வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “அது வதந்தி. அதை பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “இது புரளி என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரும் இதுதொடர்பாக விளக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அம்மாநில அரசு அதிகாரிகளே இங்கு வந்து பார்த்துவிட்டு, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறி சென்றுவிட்டனர். அந்த பிரச்னையை மீண்டும் கிளப்ப முயற்சி செய்ய வேண்டாம்’’ என்றார்.