ரூ.2,438 கோடி ஆருத்ரா மோசடி வழக்கில் திடீர் திருப்பம் முக்கிய குற்றவாளியுடன் பாஜ தலைவர்களுக்கு நெருங்கிய தொடர்பு: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் அம்பலம்

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர் ஹரீசுக்கும், பாஜக தலைவர்கள் அமர்பிரசாத் ரெட்டி மற்றும் அண்ணாமலைக்கும் நேரடி நட்பு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கட்சிக்காக இந்த மோசடி பணத்தை செலவு செய்துள்ளார். ஆனால் தலைவர்களுக்கு பணம் கொடுத்து கட்சிப் பதவி வாங்கினாரா, பணத்தை யாருக்கெல்லாம் கொடுத்தார் என்பது குறித்து போலீசார் ஹரீசிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, ஒரு லட்சம் பேர் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை நிறுவனம் திரும்ப செலுத்தவில்லை. இதையடுத்து, பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பாபு ஆஜராகி, விசாரணை தொடர்ந்து நடந்துவருவதாலும், பலர் தலைமறைவாகியிருப்பதாலும் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்று வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷை 4 நாட்களும், மாலதியை ஒரு நாளும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் ஹரீஷ் மற்றும் மாலதியை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏடிஜிபி வினித் தேவ் வாங்கடே, ஐஜி ஆசியம்மாள், எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆருத்ரா நிறுவன முக்கிய குற்றவாளியான ஹரீஷ் விசாரணையின் போது அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரீஷ்(31) குத்துச் சண்டை வீரரராக இருந்தார். குத்துச் சண்டை சங்கத்தில் மாநில நிர்வாகியாகவும் இருந்தார். இதனால் அவருடன் முக்கியப் பிரமுகர்கள் பலருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் ஆருத்ரா கோல்டு நிறுவன உரிமையாளர் ராஜசேகருடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் தனக்கு செல்வாக்கு அதிகம் என்று ராஜசேகரிடம் கூறியதால், தனக்கும் குத்துச் சண்டை வீரர் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்துள்ளவரின் நட்பு தேவை என்று அவரை தனது நிறுவனத்தில் இயக்குநராக சேர்த்தார். இதனால் ஆருத்ரா நிறுவனத்திற்காக பல்வேறு தரப்பினரையும் உறுப்பினராக சேர்த்துள்ளார். இவ்வாறு 210 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை பெற்று, இந்த நிறுவனத்தில் சேர்த்துள்ளார். இந்த நிறுவனம் பெரிய ஏஜென்டுகளாக உள்ளவர்களுக்கு மட்டுமே வட்டியை வாரி வழங்கியது. குறிப்பாக அவர்களுக்கு பிஎம் டபிள்யூ கார் உள்பட பல சொகுசு கார்கள், வீடு, பல லட்சம் ரூபாய் என பரிசுகளை வழங்கியது.

இதைப் பார்த்துத்தான் பலரும் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். ஒரு கட்டத்தில் இந்த நிறுவனம் மோசடி செய்கிறது என்பதை கண்டறிந்த ஹரீஷ், வடமாநிலத்தை சேர்ந்த பிரபல கட்சியின் தமிழக தலைவர் மூலம் ஆரூத்ரா நிறுவன உரிமையாளர் ராஜசேகரை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்பாது வடமாநில கட்சியின் தமிழக தலைவர் ராஜசேகரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். பிறகு வேறு வழியின்றி ராஜசேகர் ஹரீஷிக்கு ரூ.150 கோடியை முறையான வங்கி கணக்கு மூலம் கொடுத்து செட்டில் செய்ததாக கூறப்படுகிறது. அதாவது அவர் முதலீடாக பெற்ற பணத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு கொடுத்தால், நமக்கு என்ன லாபம் என்று கருதி, அதை அப்படியே அமுக்க ஹரீஷ் முடிவு செய்தார். இதற்காக பாஜக விளையாட்டுப் பிரிவு மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியிடம் அடைகலம் ஆனார். அடிக்கடி அவரை சந்தித்தார். அமர்பிரசாத் ரெட்டியை சந்திக்கச் செல்லும்போது தனது ஆதரவாளர்களுடன் செல்வார். வீட்டின் அருகே வந்ததும் எல்லோரையும் இறக்கி விட்டு விட்டு, அவர் மட்டும் காரில் தனியாக அமர்பிரசாத் ரெட்டியை சந்திப்பார். இதனால் அப்போது பணம் கொடுப்பதற்காகத்தான் தனியாளாக சென்றாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

அதன்பின்னர் கட்சியில் சேர்ந்த அன்றே அவருக்கு மாநில விளையாட்டு அணி மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்காக அண்ணாமலையை அமர்பிரசாத் ரெட்டியுடன் சேர்ந்து 2 முறை சந்தித்துப் பேசியுள்ளார். கட்சியில் உறுப்பினரே இல்லாதவருக்கு மாநில நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டது, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மோசடியில் இருந்து தன்னை காத்துக் கொள்ளத்தான் பாஜகவில் சேர்ந்துள்ளார். இதனால் இந்த மோசடி பணத்தை கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வழங்கியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனால் யாருக்கெல்லாம் பணத்தை கொடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பாஜக தலைவர்களுக்கு பணம் கொடுத்தது உறுதியானால் அவர்களிடமும் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.

* துபாயில் தலைமறைவான ஹரீஷ் கூட்டாளி மைக்கேல் ராஜ் கைது

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைதில் இருந்து தப்பித்து நிதி நிறுவன உரிமையாளர் ராஜசேகர், அவரது மனைவி உஷா ராஜசேகர் மற்றும் ஹரீஷ் கூட்டாளியான மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இதனால் போலீசார் 3 பேரை பிடிக்க ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு சர்வதேச போலீசார் உதவியுடன் தேடி வந்தனர். இதற்கிடையே மைக்கேல் ராஜ் மனைவி பிரின்சஸ் டயானா கடந்த வாரம் துபாயில் இருந்து விருதுநகர் திருப்பியதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிறகு நண்பரான ஹரீஷ் போலீசாரிடம் சிக்கிய தகவலை அவரது மனைவி மூலம் மைக்கேல் ராஜ் தெரிந்து கொண்டார்.

பிறகு யாருக்கும் தெரியாமல் நேற்று அதிகாலை துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அதற்கு முன்பு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மைக்ேகல் ராஜ் மனைவி பதுங்கியுள்ள விருதுநகர் மாவட்டம் சூலக்கரைக்கு சென்று சோதனை நடத்தி மோசடி தொடர்பாக முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அப்போது பிரின்சஸ் டயானா அளித்த தகவலின் படி முன்கூட்டியே போலீசார் சென்னை விமான நிலையத்தில் சாதாரண உடையில் காத்திருந்தனர். பிறகு யாருக்கும் தெரியாதபடி கடந்த 10 மாதங்களாக துபாயில் பதுங்கி இருந்த மைக்கேல் ராஜ் வெளியே வரும் போது, குடியுரிமை அதிகாரிகள் உதவியுடன் அதிரடியாக மைக்கேல் ராஜை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஆரூத்ரா மோசடியில் முக்கிய குற்றவாளி மைக்கேல் ராஜ் தனது நண்பரான ஹரீஷ் உடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். எனவே மைக்கேல் ராஜை காவலில் எடுத்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வெளிநாட்டில் பதுங்கி உள்ள ஆருத்ரா நிதி நிறுவன உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோரை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: