சென்னை: இந்தியாவே உங்கள் வீடுதான் என ராகுல் காந்திக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். எம்பி பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவருக்கு டெல்லியில் ஒதுக்கப்பட்ட 10, துக்ளக் லேன் அரசு பங்களாவை வரும் ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டுமென மக்களவை செயலகம் நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது. ராகுலுக்கு அவகாசம் தேவைப்பட்டால், அதைப் பற்றி மக்களவை வீட்டு வசதி குழுவுக்கு கடிதம் எழுதினால் அதை பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என நோட்டீசில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு அடுத்த நாளான நேற்றே ராகுல் பதில் கடிதம் அனுப்பினார். ராகுல் தனது கடிதத்தில், ‘மக்கள் ஆணையால் 4 முறை மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த பங்களாவில் நான் வசித்த காலத்தில் மகிழ்ச்சியான நினைவுகளுக்கு கடமைப்பட்டுள்ளேன். எனது எந்த உரிமையையும் கோராமல், உங்கள் கடிதத்தில் உள்ள விஷயங்களுக்கு நான் நிச்சயமாக கட்டுப்படுவேன்’ என கூறி உள்ளார். இந்நிலையில் ராகுல் காந்திக்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் அரசியல் பிரமுகருமான பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்புள்ள ராகுல் காந்தி.. இந்த நாட்டை கொடுங்கோலர்களிடம் இருந்து காப்பாற்ற விரும்பும் ஒவ்வொருவரின் வீடும் உங்கள் வீடுதான்.. இந்தியாவே உங்கள் வீடுதான்.. உங்களுக்கான ஆற்றல் அதிகம்.. நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
