டெல்லி கெஜ்ரிவால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் திடீர் வாபஸ்: விவாதத்திற்கு ஆதரவில்லாததால் பாஜக பின்வாங்கியது

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சிக்கும்,  எதிர்கட்சியான பாஜகவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. கெஜ்ரிவால்  அமைச்சரவையில் இருந்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மற்றொரு அமைச்சர்  ஆகியோர் வெவ்வேறு வழக்குகளில் சிக்கி தற்போது சிறையில் உள்ளனர். இதற்கிடையே தங்களது கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களை பாஜக இழுக்க முயற்சிப்பதாக ஆம்ஆத்மி குற்றம் சாட்டியது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி கடந்த 20ம் தேதி கெஜ்ரிவால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை டெல்லி சட்டப்பேரவை சபாநாயகரிடம் சமர்ப்பித்தார். இந்நிலையில் டெல்லி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது திடீர் திருப்பமாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முடிவை வாபஸ் பெற்றது.

இதற்கு காரணம், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஐந்தில் ஒரு பங்கு (14 எம்எல்ஏக்கள்) ஆதரவு தேவை. ஆனால் அவையில் பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மட்டுமே உள்ளதால், கெஜ்ரிவால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான முயற்சி கைவிடப்பட்டது. அதேநேரம், டெல்லியில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ திட்டம் தோல்வியடைந்தது குறித்து டெல்லி சட்டமன்றத்தில் ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் கிளப்புகின்றனர். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மதியம் சபையில் உரையாற்றுகிறார்.

Related Stories: