×

கிரீன் தமிழ்நாடு மிஷன் திட்டத்தின் கீழ் கொடைக்கானல் வனப்பகுதியில் 10 லட்சம் சோலை மரக்கன்றுகள் நட்டு வனத்துறை சாதனை

*சிறப்பு குழுவினர் பாராட்டு

*தொடர்ந்து மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை

கொடைக்கானல் : கொடைக்கானல் வனப்பகுதியில் 10 லட்சம் சோலை மரக்கன்றுகள் நட்டு வனத்துறை சாதனை புரிந்துள்ளதை சிறப்பு குழுவினர் கொடைக்கானலுக்கு வந்து ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர்.கொடைக்கானல் வனப்பகுதி 7 வன சரக்கங்களை கொண்டுள்ளது. இந்த வனச்சரக பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அந்நிய மரங்களான சவுக்கு, குங்குலியம், பைன் உள்ளிட்ட மரங்கள் அதிக அளவில் ஆக்கிரமித்து உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த மரங்கள் வெட்டப்பட்டு பல்வேறு வகையான பயன்பாட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இந்த மரங்கள் அப்படியே விடப்பட்டு உள்ளதால் வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு கூட உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் இந்த அந்நிய மரங்களால் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. நமது சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற மரங்களாகவும் இந்த மரங்கள் இல்லை.

கொடைக்கானல் வனப்பகுதியில் சோலை மரங்கள் மட்டுமே பாரம்பரிய மரங்களாக உள்ளன. எனவே அந்நிய மரங்களை அகற்றி சோலை மரங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.இதன் அடிப்படையில் கிரீன் தமிழ்நாடு மிஷன் என்ற திட்டத்தின் கீழ் கொடைக்கானல் வனப்பகுதியில் கொடைக்கானல் வனச்சரகம், பேரிஜம் வனச்சரகம், மன்னவனூர் வனச்சரகம், பூம்பாறை வனச்சரகம் ஆகிய நான்கு வனச்சரகங்களில் சுமார் 200 ஹெக்டேர் அளவிற்கு அந்நிய மரங்கள் அகற்றப்பட்டு அந்த இடங்களில் சோலை மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது தான் இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

இதன்படி சுமார் 7.5 லட்சம் சோலை மரக்கன்றுகள் நடப்பட்டு அத்தனை மரங்களும் சிறப்பாக வளர்ந்து உள்ளது. இதைப்போல தேவதானப்பட்டி வனச்சரகப் பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் மரக்கன்றுகளும் நடப்பட்டு வளர்ந்து வருகின்றன.இது பற்றி கொடைக்கானல் வனச்சரக மாவட்ட வன அலுவலர் டாக்டர் திலீப் கூறுகையில், கிரீன் தமிழ்நாடு மிஷன் திட்டப்படி கொடைக்கானல் வனச்சரக பகுதிகளில் சுமார் 7.5 லட்சம் மரக்கன்றுகள் அதாவது கொடைக்கானல் மலைப்பகுதியை பாதுகாக்க கூடிய சோலை மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.

கொடைக்கானல் வனத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட சோலை மரக்கன்றுகள். இந்த சவுக்கு, சீகை, குங்குலியம் அந்நிய மரங்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் நடப்பட்டுள்ளன. ஒரு நாற்றுக் கூட வீணாகாமல் அத்தனை நாற்றுக்களும் நல்ல முறையில் வளர்ந்துள்ளன.

இது பற்றிய ஆய்வினை சிறப்பு குழுவினர் கொடைக்கானலுக்கு வந்து ஆய்வு செய்து பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து சோலை மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் அரசு அனுமதி அளித்தவுடன் வேறு வனவனச்சரக பகுதிகளில் உள்ள அந்நிய மரங்கள் அகற்றப்பட்டு அந்த பகுதிகளிலும் இந்தப் பகுதிக்குரிய சோலை மரக்கன்றுகள் நடப்பட நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் சோலை மரங்கள் நிறைந்து இயற்கை எழிலை காக்கும் நிலை ஏற்படும். சோலை மரங்கள் எப்பொழுதுமே நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகளை பாதுகாக்க கூடிய மரங்கள் ஆகும் இவ்வாறு அவர் கூறினார்.

50 ஆண்டுகள் தேவைப்படும்

மலைப்பகுதிகளில் சவுக்கு, சீகை, குங்குலியம் உள்ளிட்ட அந்நிய மரங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் வளர்ந்துள்ளன. இதனால் இயற்கையாக வளரும் புல்வெளிகள் மற்றும் சோலைக்காடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள், உணவு கிடைக்காமல் காடுகளை விட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.

எனவே அந்நிய மரங்களை அகற்ற நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. குறிப்பாக பேரிஜம் வனச்சரகத்திற்கு செல்லும் வழியில் பிரமாண்டமான சுற்றுலாத் தலமான மதிகெட்டான் சோலை அருகே 50 ஹெக்டேர் சீகை மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. சோதனை முறையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதனை முழுமையாக மேற்கொள்ள பொதுமக்கள் வலியுறுத்தி இருந்தனர். கொடைக்கானல் முழுவதும் உள்ள அந்நிய மரங்களை அகற்ற 50 ஆண்டுகள் வரை தேவைப்படும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.

Tags : Green Tamil Nadu Mission ,Kodaikanal forest , Kodaikanal: The special team has achieved a forest department record by planting 10 lakh oasis tree saplings in Kodaikanal forest.
× RELATED கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை